உடனடியாக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் – விசிக தலைவர் திருமாவளவன்

தமிழக ஆளுநராக என்.ஆர்.ரவி நியமிக்கப்பட்டியிருப்பதை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தல்.

சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகமான அம்பேத்கர் திடலில் இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை முன்னிட்டு திருமாவளவன், அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இம்மானுவேல் சேகரன் சமூக நீதிக்காக போராடியவர் என்றும் அவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய திருமாவளவன் எம்பி, தமிழகத்தில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆளுநர் ஆர்.என் ரவி உளவுத்துறையோடு சுலபமாக தொடர்பில் உள்ளவர். மத்திய அரசு வேண்டுமென்றே இன உணர்வையும், மொழி உணர்வையும் அழிக்கக் கூடிய ஒருவரை ஆளுநராக நியமித்துள்ளது.

இதனால் தற்போது தமிழகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஆளுநரை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் ஜனநாயக முறைப்படி பணியாற்றக் கூடிய ஒருவரை தமிழகத்தின் ஆளுநராக பணியமர்த்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதனிடையே, தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக அறிவிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். கேரளா பிரிவைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி மற்றும் ஆரம்ப காலத்தில் கேரள மாநில பணிகளில் இருந்த ரவி, சில ஆண்டுகளுக்குள் சிபிஐக்கு மாற்றப்பட்டார்.

குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கண்காணித்து தடுக்கும் பிரிவிலும், ஊழல் தடுப்பு பிரிவிலும் பணியாற்றினார். பின்னர் உளவுத்துறையில் சேர்ந்தார். மத்திய அரசின் பல்வேறு பணிகளில் பணியாற்றியுள்ள என்.ஆர் ரவி, துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்