“தேர்தலுக்கு முன் ஒரு பேச்சு,தேர்தலுக்கு பின் ஒரு பேச்சு;ஆளுநர் உரை ஏமாற்றமளிக்கிறது” – எடப்பாடி பழனிச்சாமி..!

16 வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களின் உரை ஏமாற்றமளிக்கிறது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தமிழக 16 வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கின் மூன்றாம் தளத்தில் இன்று காலை தொடங்கி,நடைபெற்றது.முதலாவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார்.உரையில் பல்வேறு திட்டங்கள் பற்றி கூறினார்.

இந்நிலையில்,ஆளுநர் உரை ஏமாற்றமளிக்கிறது என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூறுகையில்:

திமுக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தார்கள்.ஆனால்,தேர்வை ரத்து செய்யாமல்,அதற்குப் பதிலாக நீதியரசர் ராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளார்கள்.

இதற்கிடையில்,கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள்,”மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதன்மூலம்,திமுக அரசு தேர்தலுக்கு முன் ஒரு பேச்சு,தேர்தலுக்கு பின் ஒன்றை பேசியுள்ளார்கள்.எனவே,தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு செயல்படுத்தவில்லை.

மாண்புமிகு அம்மா அவர்களின் அதிமுக அரசு விவசாயிகளின் பயிர்க்கடன்களை ரத்து செய்து,அதற்கான சான்றிதழ்களையும் வழங்கினோம்.ஆனால்,திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று 44 நாட்கள் ஆகியும் விவாசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய பயிர்க்கடனை ரத்து செய்ததற்கான சான்றிதழ்கள் அவர்களிடம் வழங்கப்படவில்லை. பருவமழை தொடங்கியதால் விவசாயிகளுக்கு புதிய பயிர்க்கடன் வழங்கவேண்டும்.

மேலும்,திமுகவின் தேர்தல் வாக்குறுதிப்படி:

  • மாணவர்களின் கல்விக்கடன் ரத்து குறித்த அறிவிப்பு ஆளுநர் உரையில் இடம் பெறவில்லை. அதுமட்டுமல்லாமல்,பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5 மற்றும் டீசலுக்கு ரூ.4 குறைக்கப்படும் என்ற அறிவிப்பும் ஆளுநர் உரையில் இடம் பெறவில்லை.
  • இதனைத் தொடர்ந்து,குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்,மற்றும் முதியோர் ஊக்கத்தொகை ரூ.1000 லிருந்து ரூ.1500 ஆக வழங்கப்படும் என்ற அறிவிப்பும் இடம் பெறவில்லை.
  • அதேபோல,கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும் மற்றும் மீன்படி தடைகாலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை மேற்கொண்டு கூடுதலாக வழங்கப்படும் என்று திமுக அரசு தெரிவித்தது. ஆனால்,இவை எதுவும் ஆளுநர் உரையில் இடம் பெறவில்லை.
  • மேலும்,கோதாவரி-காவேரி இணைப்பு திட்டம் அம்மா அவர்கள் செயல்படுத்த நினைத்தார்கள்.ஆனால்,அவர்கள் மறைந்த காரணத்தினால் அம்மா வழியில் செயல்பட்ட அரசு,பிரதமரை சந்தித்து கோரிக்கை விடுத்தது
  • அதன் பின்னர்,அதை நிறைவேற்றுவதற்கான விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட மாநிலத்திற்கு கொடுக்கப்பட்டது. ஆனால்,இதுபோன்ற முக்கியமான திட்டம் எதுவும் ஆளுநர் உரையில் இடம் பெறாமல்,விவசாயிகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளது.”என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,”அதிமுக அரசு இருந்தபோது கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருந்தது.ஆனால்,திமுக அரசு கொரோனாவைக் கட்டுப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை”, என்று தெரிவித்தார்.