மழைநீர் வீணாவதை தடுக்க தமிழக அரசு புதிய சட்டத்தை வகுக்க வேண்டும் – விஜயகாந்த்

மழைநீர் வீணாவதை தடுக்க தமிழக அரசு புதிய சட்டத்தை வகுக்க வேண்டும் – விஜயகாந்த்

மழைநீர் கடலில் வீணாக கலப்பதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில், ‘தமிழகத்தில் மழைக் காலங்களில் மக்கள் தண்ணீரில் தத்தளிப்பதும், கொடைக்காலங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டில் சிக்கி தவிப்பதும் தொடர் கதையாகி வருகிறது. தற்போது பெய்து வரும் பருவமழையால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக்கடாக காட்சியளிக்கின்றன. இருப்பினும் போதிய அளவு மழைநீர் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படாததால் மழைநீர் கடலில் வீணாக கலந்து வருகிறது.

இதனால் கொடைக்காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. மேலும் கிணற்று பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் பயிர்களைப் காப்பாற்ற முடியாத நிலை உண்டாகிறது. அணைகள், ஆறுகள், குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை தமிழக அரசு பாதுகாக்க தவறியதால் கோடைக்காலங்களில் தண்ணீர் பஞ்சமும், வறட்சியும் நம்மை வாட்டி வதைக்கிறது. இயற்கை நமக்கு கொடையாக கொடுக்கும் தண்ணீரை இதுவரை நாம் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. வரமாக கிடைக்கும் மழைநீர் கடலில் வீணாக கலப்பதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீர்நிலைகளை தூர்வாருதல், புதிய தடுப்பணைகள் கட்டுதல் போன்ற திட்டங்கள் மூலம் மழைநீரை சேமித்து வைக்க முடியும். இதன்மூலம் கோடைகாலத்தில் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க முடியும். தவறும் பட்சத்தில் தமிழகம் வளத்திலும் வளர்ச்சியிலும் பின்னடைவை சந்திக்கும். எனவே, மக்களின் எதிர்கால நலன் கருதி தொலைநோக்கு பார்வையுடன் மழைநீர் சேகரிப்புக்கு புதிய செயல் திட்டத்தை தமிழக அரசு வகுக்க வேண்டும்.’ என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube