பிரிட்டனில் மிகப்பெரிய இணைய செயலிழப்பு;செய்தி மற்றும் சமூக வலைத்தளங்கள் அனைத்தும் முடங்கின…!

பிரிட்டனில் மிகப்பெரிய இணைய செயலிழப்பு;செய்தி மற்றும் சமூக வலைத்தளங்கள் அனைத்தும் முடங்கின…!

  • பிரிட்டனில் மிகப்பெரிய இணைய செயலிழப்பு ஏற்பட்டதன் காரணமாக அரசு,செய்தி மற்றும் சமூக வலைத்தளங்கள் அனைத்தும் முடங்கியுள்ளன.

பிரிட்டனில் செயல்பட்டு வரும் ‘ஃபாஸ்ட்லி’ (Fastly) எனும் கிளவுட் கம்ப்யூட்டிங் சேவை வழங்கும் நிறுவனம் ‘எட்ஜ் கிளவுட்’ (Edge Cloud) என்ற சேவையை பல வலைதளங்களுக்கு வழங்குகிறது.அதன்படி,இது வலைதளங்களின் லோடிங் நேரத்தை (loading time)  குறைப்பதற்கும்,சேவை மறுப்பு பிரச்சினைகளிலிருந்து தளங்களை பாதுகாப்பதற்கும்,இணைய போக்குவரத்து சிக்கல்களை சமாளிக்க உதவுவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,உலகம் முழுவதும் உள்ள பைனான்சியல் டைம்ஸ்,நியூயார்க் டைம்ஸ், சி.என்.என் மற்றும் ப்ளூம்பெர்க் நியூஸ்,அமேசான்,ரெடிட் மற்றும் பிரிட்டன் அரசாங்கத்தின் வலைத்தளமான gov.uk, உள்ளிட்ட பல சர்வதேச வலைத்தளங்கள் இன்று ஏற்பட்ட மிகப்பெரிய இணைய செயலிழப்பு காரணமாக முடங்கின.இதனால் பல பயனர்கள் பாதிக்கப்பட்டனர்.

ஏறக்குறைய 21,000 ரெடிட் பயனர்கள்,2,000 க்கும் மேற்பட்ட அமேசான் பயனர்கள் வலைதளத்தை பயன்படுத்த முடியாமல் புகார் அளித்ததாக,டிஜிட்டல் ஊடகங்களின் செயலிழப்பு கண்காணிப்பு வலைத்தளமான டவுன்டெக்டர் (Downdetector.com) தெரிவித்துள்ளது.

இதனையடுத்து,ஃபாஸ்ட்லி (Fastly) நிறுவனத்தின் உள்ளடக்க விநியோக நெட்வொர்க்கில் (CDN) தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால்தான்,இந்த உலகளாவிய செயலிழப்பு ஏற்பட்டதாக கண்டறியப்பட்டது.

இதற்கு பதிலளித்துள்ள ஃபாஸ்ட்லி நிறுவனம்,தொழில்நுட்ப கோளாறு அனைத்தும் விரைவில் சரி செய்யப்பட்டு மீண்டும் சர்வதேச வலைத்தளங்கள் அனைத்தும் செயல்படும் என தெரிவித்துள்ளது.

எனினும்,உலகம் முழுவதும் உள்ள பல பிரபல வலைத்தளங்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கியது பயனர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Join our channel google news Youtube