குட்நீயூஸ்..அரசு வேலைவாய்ப்பில் தமிழ்வழி கல்வி பயின்றோருக்கு இடஒதுக்கீடு – விவரம் கோரிய டிஎன்பிஎஸ்சி..!

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – 1 (தொகுதி – 1) அடங்கிய பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வெழுதிய விண்ணப்பதாரர்களில், தமிழ்வழி கல்வி பயின்றோருக்கு அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் விவரம் கேட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தால் கடந்த 03,01,2021 அன்று நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – 1 (தொகுதி – 1) அடங்கிய பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வெழுதிய விண்ணப்பதாரர்களுள்,தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் விவரம் கோரியுள்ளது.அதன்படி,குரூப் -1 முதல்நிலைத் தேர்வு எழுதியவர்கள்,1 முதல் 10 ஆம் வகுப்பு வரை படித்த தமிழ் வழிக் கல்விக்கான சான்றை பதிவேற்ற வேண்டும்.மேலும்,+1 மற்றும் +2 அல்லது பட்டப்படிப்பை தமிழ்வழியில் படித்ததற்கான சான்று ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இவை அனைத்தையும் ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 16 ஆம் தேதி வரை இணையதளத்தில் சான்றிதழை பதிவேற்றம் செய்யவேண்டும் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும்,இது தொடர்பாக ,டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

“தேர்வாணையத்தால் கடந்த 03,01,2021 அன்று நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – 1 (தொகுதி – 1}ல் அடங்கிய பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வெழுதிய விண்ணப்பதாரர்களுள் தமிழ் வழியில் பயின்றுள்ளதாக தனது, இணையவழி விண்ணப்பத்தில் கோரியுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் கல்வித் தகுதிகளை தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் 05.08,2021 அன்று வெளியிடப்படவுள்ள உரிய படிவத்தில், 16.08.2021 முதல் 16.09.2021 வரை வேலை நாட்களில்) ஸ்கேன் (Scan) செய்து தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்;

1. பள்ளி முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை

2. மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு அல்லது பட்டயப் படிப்பு

3. பட்டப் படிப்பு

குறித்த தகவல் உரிய விண்ணப்பதாரர்களுக்கு அதாவது விண்ணப்பத்தில் தமிழ் வழியில் கல்வி பயின்றதாக குறிப்பிட்டு முதனிலைத் தேர்வு எழுதியவர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும். இதைத் தவிர தேர்வாணைய இணையதளம் மூலமாகவும் இது குறித்த குறிப்பாணையினை 05.08.2021 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட நாட்களுக்குள் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவில்லை எனில் அவர்களது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது”,என்று அறிவித்துள்ளது.