#BREAKING: தங்க கடத்தல்… ஸ்வப்னாவை 5 நாள் காவலில் விசாரிக்க சுங்கத்துறைக்கு அனுமதி.!

ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் இருவரையும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சுங்கத்துறைக்கு அனுமதி.

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஜூலை 5-ம் தேதி சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக நடத்திய சோதனையில் ரூ.15 கோடி மதிப்பிலான 30 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது. இது அரபு எமிரேட்ஸ் தூதரக அலுவலக முன்னாள் ஊழியர்களான ஷரீத், கேரள தகவல் தொழில்நுட்ப பிரிவு அதிகாரியாக பணியாற்றிய ஸ்வப்னா ஆகியோருக்கு இந்த கடத்தலில் முக்கிய தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதில் ஷரித் கைது செய்யப்பட்டார். முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையில், பெங்களூருவில்  தலைமறைவாக பதுங்கியிருந்த ஸ்வப்னா மற்றும் அவருடைய கூட்டாளி சந்தீப் நாயர் ஆகிய இருவரையும் என்.ஐ.ஏ.எனப்படுகின்ற தேசிய புலனாய்வு ஏஜென்சி போலீசார் அதிரடியாக கைது செய்து கொச்சினில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் .

பின்னர், என்ஐஏ அதிகாரிகள் முக்கிய குற்றவாளிகளான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரை காவலில் எடுத்து விசாரித்து வந்தது. விசாரணை கடந்த 24-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், கொச்சியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது, ஸ்வப்னா, அதிகாரிகளின் விசாரணையில் மனஉளைச்சல் ஏற்பட்டது என்றும், தனது இரு குழந்தைகளையும் காண ஆவலுடன் இருக்கிறேன் என நீதிபதிகளிடம் கூறினார். இதனால், ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் இருவருக்கும் ஆகஸ்டு 21-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சுங்கத்துறைக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan