பில்லி சூனியம் எடுப்பதாக கூறி ரூ.85 லட்சம் மோசடி செய்த கும்பல் கைது…!

பில்லி சூனியம் எடுப்பதாக கூறி ரூ.85 லட்சம் மோசடி செய்த கும்பல் கைது.

தாம்பரம் கன்னடபாளையத்தை சேர்ந்த அந்தோணியம்மாள், கற்பகம் அனிதா ஆகியோர் சகோதரிகள் ஆவர். இவர்கள் மூவரும் கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் அனிதாவின் குடும்பம் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, மேற்கு தாம்பரம் பகுதியை சேர்ந்த பாத்திமா (40), அவரது தம்பி அபு ஹசன் (35), தங்கை ரஹமது பீவி நிஷா (29), அபு ஹசனின் நண்பர் ராஜேந்திரன் (41) ஆகியோர், அந்தோணியம்மாள், கற்பகம் மற்றும் அனிதா ஆகியோரை சந்தித்து உங்களுக்கு யாரோ பில்லி சூனியம் வைத்துள்ளனர் என்றும், அதனால்தான் கணவரை பிரிந்து தனியாக வாழ்கிறீர்கள், குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படுகிறது என்றும் கூறியுள்ளனர்.

மேலும் இந்த சூனியத்தை மந்திரம் மூலம் எடுத்து விட்டால் மீண்டும் உங்களது கணவர்கள் ஒன்று சேர்ந்து விடுவார்கள், குடும்ப பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்று ஆசை வார்த்தைகளை கூறி அவர்கள் மூவரையும் சூனியத்தை எடுக்க சம்மதிக்க வைத்துள்ளனர்.

இதனையடுத்து சூனியம் எடுப்பதாக கடந்த ஒரு ஆண்டாக மூவரிடமும் ரூ.85 லட்சம் ஏமாற்றி பெற்றுள்ளனர். இந்த பணத்தை வைத்து பாத்திமா, தாம்பரம் அடுத்த இரும்புலியூர் சந்திரன் நகரில் சொகுசு பங்களா ஒன்றை கட்டி வசித்து வந்துள்ளார்.

இதனை எடுத்து அந்தோணியம்மாள், கற்பகம், அனிதா மூவரும் தங்கள் ஏமாந்து போனதை உணர்ந்து காவல்துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் அவர்கள் 4 பேரையும் நேற்று கைது செய்தனர். இதுபோல் இவர்கள் 4 பேரும் பலரிடம் லட்சக்கணக்கில் பறித்துள்ளதாகவும், அந்த பணத்தை மீட்டுத்தர போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.