ஜி ஸ்கொயர் ரெய்டு – ரூ.700 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு? 3.5 கோடி ரூபாய் பறிமுதல்!

ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற வருமான வரி சோதனையில் ரூ.3.5 கோடி ரோகம் பரிமுதல் என தகவல். 

வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்து சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் கடந்த ஒருவாரமாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி, சென்னை, கோவை, திருச்சி, ஓசூர் உள்ளிட்ட இடங்களிலும், கர்நாடகாவில் பெங்களூரு, மைசூர், பெல்லாரி உள்ளிட்ட சுமார் 70 இடங்களிலும் தொடர் சோதனை நடைபெற்று வந்தது.

 ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் சோதனை:

அதாவது, குறைந்த காலக்கட்டத்தில் அதிக வருமானம் ஈட்டியதாகவும், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் கடந்த ஒரு வாரமாக வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வந்தனர்.

வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு:

கடந்த 24-ம் தேதி தொடங்கிய சோதனை நேற்று நிறைவு பெற்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில், ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் நடத்திய சோதனையில் 700 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கணக்கில் வராத 3.5 கோடி ரூபாய் வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

வருமான வரித்துறை சம்மன்:

பல‌ கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீட்டு ஆவணங்கள், சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், ஜி ஸ்கொயர் பாலா அடுத்த வாரம் இறுதிக்குள் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

திமுக எம்எல்ஏ வீட்டில் சோதனை:

இதனிடையே, ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வந்த நிலையில், திமுக எம்எல்ஏ வீட்டிலும் சோதனை நடைபெற்று இருந்தது. அதாவது, அண்ணா நகர் தொகுதி திமுக எம்எல்ஏ மோகன் மற்றும் அவரது மகன் கார்த்திக் ஆகியோரது வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்