கொரோனா அதிகரிப்பால் இரண்டு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல் – மகாராஷ்டிரா அரசு அதிரடி!

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள இரண்டு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வருட காலங்களாக உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் அண்மையில் சற்றே குறைந்து வந்தது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தீவிரம் அதிகமாக இருந்த நேரத்தில், மகாராஷ்டிரா மாநிலம் தான் தொற்று அதிகம் கொண்ட மாநிலம் கருதப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கம் மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகரிக்க துவங்கிவிட்டது. தினமும் 4 முதல் 5 ஆயிரம் பேர் வரை புதிதாக தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர்.

நேற்று மட்டும் மகாராஷ்டிராவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து பொது மக்கள் முக கவசம் அணிவதையும் சமூக இடைவெளியை பின்பற்றுவதையும் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும், இல்லை என்றால் ஊரடங்கு மீண்டும் சந்திக்க நேரிடும் எனவும் மகாராஷ்டிர முதல்-மந்திரி ஏற்கனவே எச்சரித்து இருந்த நிலையில் தற்பொழுது மகாராஷ்டிராவில் அதிகம் கொரோனா பாதிப்பு உள்ள இரண்டு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தின் அமராவதி மற்றும் யவத்மால் ஆகிய இரு மாவட்டங்களுக்கும் இரவு நேர பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமராவதியில் சனிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கள் காலை 7 மணி வரையிலும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள அமராவதி மாவட்டத்தின் ஆட்சியர் லோகேஷ் அவர்கள், மக்கள் கொரோனா நடவடிக்கைகளை இனியாவது பின்பற்றுங்கள், இல்லையென்றால் இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என கூறியுள்ளார்.

author avatar
Rebekal