ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு மானிய விலையில் நான்கு சக்கர வாகனம் – அமைச்சர் கயல்விழி..!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு தாட்கோ திட்டத்தின் கீழ் 30% மானிய விலையில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நான்கு சக்கர வாகனங்களை வழங்கியுள்ளார்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மானிய விலையில் வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டார்.

இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினர் 10க்கும் மேற்பட்டோருக்கு தாட்கோ திட்டத்தின் கீழ் ஆட்டோ மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் படி ஆட்டோ மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதன் விலையில் 30% அரசு மானியமாகவும், 65% குறைந்த வட்டியில் கடனாகவும் வழங்கப்படுகிறது.

பயனாளர்கள் இந்த வாகனங்களை பெறுவதற்கு 5% வாகன விலையை மட்டும் செலுத்த வேண்டும். இதன் காரணத்தால் பலரும் வாகனங்களை பெறுவதற்கு ஆர்வமுடன் பதிவு செய்து வருகின்றனர் என்று ஆதிதிராவிடர் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.