முன்னாள் எஸ்.பி மறைவு – நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை:ஊழல் ஒழிப்பைத் தனது நெஞ்சில் சுமந்து,நேர்மையோடு நியாயத்தை நிலைநாட்டிய காவல் கண்காணிப்பாளர் நல்லம்ம நாயுடு அவர்களின் மறைவு பேரிழப்பாகும் என்று முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை முன்னாள் எஸ்.பி நல்லம்ம நாயுடு. இவருக்கு வயது 83. இவர் உடல் நலக் குறைவு காரணமாக இன்று அதிகாலை சென்னை பெரவள்ளுரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

nallamanayudu

இதனையடுத்து,அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில்,அவரது இல்லத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி,பின்னர் மறைந்த நல்லம்ம நாயுடு அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து,அவரது மறைவு குறித்து முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“ஊழல் ஒழிப்பைத் தனது நெஞ்சில் சுமந்து – நேர்மையோடும் துணிச்சலோடும் எவ்வித அச்சுறுத்துலுக்கும் அஞ்சாது நியாயத்தை நிலைநாட்டிய காவல் கண்காணிப்பாளர் நல்லம்ம நாயுடு அவர்களின் மறைவு பேரிழப்பாகும். அன்னாருக்கு நேரில் இறுதி மரியாதை செலுத்தி அவர் குடும்பத்துக்கு எனது ஆறுதலைத் தெரிவித்தேன்”,என்று பதிவிட்டுள்ளார்.

யார் இந்த நல்லம்ம நாயுடு:

இவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்தவர். ஜெயலலிதாவிற்கு எதிரான ஊழல் மற்றும் லஞ்ச புகார்களை விசாரித்து, அவரை கைது செய்து அவருக்கு எதிராக ஆறு மாதத்தில் குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்தார். இதுதான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, முதல்வர் பதவியை இழக்க காரணமாக இருந்தது.மேலும்,இவர் இரண்டு முறை குடியரசுத்தலைவரிடம் விருது பெற்றுள்ளார்.லஞ்ச ஒழிப்புத்துறையில் திறம்பட செயல்பட்டதற்காக ஆளுநரிடமும் முன்னதாக விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.