பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வீடு திரும்பினார்..!

ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வீடு திரும்பினார்.

அல்-காதர் அறக்கட்டளை நில மோசடி வழக்கில், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் வளாகத்தில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதால் நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது. இதனையடுத்து, இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதம் என பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தெரிவித்த நிலையில், இம்ரான் கானை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டது.

அதன்படி, சிறப்பு படை இம்ரான் கானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. அப்போது, இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதம் என்றும் சிறையில் இருந்து உடனடியாக இம்ரான் கானை விடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் உயர்நீதிமன்றத்தில் ஆஜரான இம்ரான் கானுக்கு 2 வாரம் ஜாமீன் வழங்கி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இன்று லாகூரில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்துள்ளார்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.