முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மரணம் – முதல்வர் பழனிசாமி இரங்கல்.!

பிரணாப் முகர்ஜி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனையடைந்தேன் – முதல்வர்

கொரோனாவால் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சிகிச்சை பலனின்றி காலமானார். அவர் உயிரிழந்த செய்தியை அவரின் மகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரணாப் முகர்ஜி மறைவிற்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், தற்போது தமிழக முதல்வர் பழனிசாமி மறைந்த பிரணாப் முகர்ஜிக்கு இரங்கலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் இந்திய குடியரசுத் தலைவரும், மூத்த அரசியல் தலைவருமான பிரணாப் முகர்ஜி அவர்கள் உடல் நலக்குறைவால் புது டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். பிரணாப் முகர்ஜி இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்து, சிறப்பாக மக்கள் பணியாற்றியவர். இவர் நிதித்துறை, பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், பாராளுமன்ற உறுப்பினராக மக்களவையிலும்,  மாநிலங்களவையிலும் திறம்பட செயலாற்றியவர்.

மேலும், இந்திய அரசின் உயரிய பாரத ரத்னா மற்றும் பத்ம விபூஷன் விருதுகளை பெற்று சிறப்புக்குரியவர் என்றும் பிரணாப் முகர்ஜி அவர்களின் மறைவு இந்தியாவிற்கு ஓர் பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்