முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் ரெய்டு – போலீசாருடன் அதிமுகவினர் மோதல்!

முன்னாள் அமைச்சர் கேசி வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் வாக்குவாதம்.

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், கே.சி.வீரமணி வருமானத்துக்கு அதிமாக சொத்து சேர்த்ததாக வேலூரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், ஜோலார்பேட்டையில் உள்ள கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல், சென்னை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடைபெறுகிறது.

திருப்பத்தூர் ஜோலார்பேட்டை இடையம்பட்டியில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கேசி வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காவல்துறையினருடன் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வீட்டின் வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் உடன் அதிமுகவினர் மோதலில் ஈடுபட்டதாகவும், அப்போது கைது செய்து வேனில் ஏற்றிய நிலையில், போலீசாரை தள்ளிவிட்டு கீழே இறங்கியதாகவும் தகவல் கூறப்படுகிறது.

2011 முதல் 2021 வரை ஜோலார்பேட்டை எம்எல்ஏவான கேசி வீரமணி, அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தததாக தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், எம்ஆர் விஜயபாஸ்கர், எஸ்பி வேலுமணி ஆகியோர் வீடுகளில் சோதனை நடைபெற்ற நிலையில், தற்போது கேசி வீரமணி வீட்டில் சோதனை நடைபெறுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்