நாம் அனைவருமே கடல் உணவு வகைகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. அந்த வகையில், மீன்களில் பலவகை உண்டு. அதிலும் நெத்திலி மீன் என்றால் பலருக்கும் ஸ்பெசலான ஒன்று. மீனை வைத்து நாம் வறுவல், குழம்பு, பொரியல் போன்ற வகைகளில் சமைத்து சாப்பிடுகின்றனர்.
இந்த மீனில் இதில் புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை நிறைந்துள்ளன. இந்த மீனில் கொழுப்பு சத்து குறைவாக உள்ளதால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு சிறந்த உணவு. மேலும் இது இதயம் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
தற்போது இந்த பதிவில் நெத்திலி மீன் தொக்கு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- நெத்திலி மீன் – 1 கிலோ
- எண்ணெய் – 1/2 கப்
- கடுகு – 1 தேக்கரண்டி
- வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
- சீரகம் – 1 தேக்கரண்டி
- பூண்டு – 5 பல்
- இஞ்சி – 1 இன்ச்
- தக்காளி – 2
- பச்சை மிளகாய் – 2
- மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
- தனியா தூள் – 1/2 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- தேங்காய் பால் – 1 கப்
- கொத்தமல்லி இலை – சிறிது
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் நெத்திலி மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து, மீன் முள்ளை நீக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, வெந்தயம், சீரகம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
சற்று வதங்கிய பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதனுடன் பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள் ஆகியவற்றையும் சேர்த்து வதக்க வேண்டும். பின் நெத்திலி மீனை சேர்த்து 5 நிமிடம் வதக்கி, தேங்காய் பாலை சேர்த்து கொதிக்க வைக்கவும். பின் தேவையான அளவு உப்பு சேர்த்து, கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
நெத்திலி மீனை வைத்து குழம்பு, பொரியல் மட்டும் செய்து சாப்பிட்டவர்கள் இந்த ரெசிபியை செய்து பார்க்கலாம். இதனை வெறும் சாதத்துடனும் சாப்பிடலாம், சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடனும் சாப்பிடலாம்.