ஐந்து முக்கிய திட்டங்கள்! இந்தெந்த தேதிகளில் அமல்.. கர்நாடகா முதல்வர் அதிரடி அறிவிப்பு!

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கும் திட்டம் ஆகஸ்ட் 15 முதல் அமலுக்கு வரும் என கர்நாடக முதல்வர் அறிவிப்பு.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோரும் ரூ.2,000, வேலையில்லாத பட்டதாரிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.3,000 மற்றும் வேலையில்லாத பட்டயப் படிப்பு படித்தவர்களுக்கு ரூ.1,500, வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு நபருக்கு 10 கிலோ அரிசி, பெண்களுக்கு இலவச பயணம், 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற 5 முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, கடந்த 10-ம் தேதி நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளைக் கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே. சிவகுமாரும் கடந்த 20-ம் தேதி பதவியேற்றனர்.இதன்பின், கர்நாடக அமைச்சரவையில் மொத்தம் 34 அமைச்சர்கள் பதிவியேற்றனர்.

இதனிடையே, காங்கிரஸ் அளித்த 5 முக்கிய வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த சமயத்தில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் இன்று முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. 2023ஆம் ஆண்டுக்கான முதல் மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் உட்பட அமைச்சர்கள் பலரும் பங்கேற்றனர். அப்போது, காங்கிரஸ் அளித்த 5 வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது.

கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 5 முக்கிய திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், கர்நாடக அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதலமைச்சர் சித்தராமையா, அமைச்சரவை கூட்டத்தில் நாங்கள் ஐந்து முக்கிய  உத்தரவாதங்களையும் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம் என்றார். அதன்படி, 5 முக்க்கிய திட்டங்கள் அமலுக்கு வரும் தேதியையும் அறிவித்துள்ளார்.

முதல் உத்தரவாதம் ‘க்ருஹா ஜோதி’: இது 199 யூனிட்டுகள் வரை உள்ள குடும்பங்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கிறது. அதாவது, ஜூலை 1-ஆம் தேதி முதல் கர்நாடகாவில் மாதந்தோரும் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்தார்.

இரண்டாவது உத்தரவாதம் ‘க்ருஹ லக்ஷ்மி’: குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோரும் ரூ.2,000 வழங்கப்படும். இத்திட்டம் ஆகஸ்ட் 15 முதல் அமலுக்கு வருகிறது.

மூன்றாவது உத்தரவாதம்’அன்ன பாக்யா’: அனைத்து பிபிஎல் குடும்பங்களுக்கும் (தலைக்கு) மற்றும் அந்த்யோதயா அட்டை வைத்திருப்பவர்களுக்கு 10 கிலோ அரிசி வழங்கப்படும். இது ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

நான்காவது உத்தரவாதம் ‘சக்தி’: அனைத்து பெண்களும் மாநிலத்திற்குள் ஏசி பேருந்துகள், ஸ்லீப்பர் பேருந்துகள் மற்றும் ராஜஹம்சா பேருந்துகள் தவிர அரசு பேருந்துகள், BMTC மற்றும் KSRTC ஆகியவற்றில் இலவசமாகப் பயணம் செய்யலாம். KSRTC பேருந்துகளில் 50% ஆண்களுக்கும், 50% பெண்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும். ஜூன் 11 முதல் இது அமலுக்கு வருகிறது.

ஐந்தாவது உத்தரவாதம் ‘யுவ நிதி’: இந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற வேலையற்ற பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000 என 2 ஆண்டுகள் வரை வழங்கப்படும். இதுபோன்று, வேலையில்லாத டிப்ளமோதாரர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு அல்லது வேலை கிடைக்கும் மாதம் ரூ.1,500 வழங்கப்படும். ‘யுவ நிதி’ திட்டத்திற்கான விண்ணப்பப் படிவம் விரைவில் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

இன்று கர்நாடகாவுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்துள்ளோம். நாங்கள் 5 உத்தரவாதங்களை செயல்படுத்தப் போகிறோம், அதற்கான காலக்கெடுவை வழங்கியுள்ளோம். இந்த உத்தரவாதத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி முன்னிலையில் கையெழுத்திட்டுள்ளோம். விரைவில் செயல்படுத்த உள்ளோம் என்றும் காங்கிரஸால் அறிவிக்கப்பட்ட ஐந்து ‘உத்தரவாதங்களை’ செயல்படுத்த ஆண்டுக்கு ரூ.50,000 கோடி செலவாகும் எனவும் கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்