கடத்தப்பட்ட மகனை 24 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடித்த பாசக்கார தந்தை..!-நெகிழ்ச்சி சம்பவம்..!

2 வயதில் கடத்தப்பட்ட மகனை 24 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடித்த பாசக்கார தந்தையின் நெகிழ்ச்சி சம்பவம் சீனாவில் நடைபெற்றுள்ளது.

சீனாவில் அதிக மக்கள் தொகை இருந்தாலும் அங்கு குழந்தை கடத்தல் மிகுதியாக நடக்கிறது. ஷாங்டாங் மாகாணத்தில் உள்ள குவோ கேங்டாங் என்பவரின் 2 வயது மகன் 1997 ஆம் ஆண்டு வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தவேளையில் கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இதுகுறித்து இவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

போலீசாரும் கடத்திய கும்பலை கைது செய்தனர். ஆனாலும், குழந்தை கிடைக்கவில்லை. இதனால் குவோ கேங்டாங் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் குழந்தையை தேட முடிவு செய்தார்.

மோட்டார் சைக்கிளின் முன்பக்கம் அக்குழந்தையின் புகைப்படத்துடன் அவரிடம் இருந்த மொத்த பணத்தையும் எடுத்துக்கொண்டு நாட்டின் ஒவ்வொரு மாகாணமாக தேட முற்பட்டுள்ளார்.

ஒருகட்டத்தில் அவரிடம் இருந்த பணமும் தீர்ந்து போய்விட்டது. அப்போது அவரது பயணத்தை தொடருவதற்கு பிச்சை எடுத்துள்ளார்.  மேலும், வழிகளில் பலமுறை விபத்துக்குள்ளாகி எலும்பு முறிவுகளும் ஏற்பட்டுள்ளது. தேடும் பயணத்தின் போது கொள்ளையர்களிடமும் பணத்தையும் இழந்துள்ளார்.

எதனையும் பொருட்படுத்தாது தனது மகனை தேடுவது ஒன்றே குறிக்கோள் என்று முயற்சித்த இவருக்கு 24 ஆண்டுகளுக்கு பிறகு இவரது மகன் கிடைத்திருப்பது நெகிழ்ச்சியான சம்பவமாக அமைந்துள்ளது.

கடந்த 24 வருடங்களில் 20 மாகாணங்களை அவர் சுற்றி வந்துள்ளார். கிட்டத்தட்ட 5 லட்சம் கி.மீ. பயணம் செய்துள்ளார். தற்போது அவருடைய மகனுடன் இணைந்துவிட்டார். இந்த சம்பவம் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.