வேலை தேடும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக “Pravasi Rojgar” என்ற செயலியை உருவாக்கிய பிரபல நடிகர்.!

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலையை எளிதில் பெற “Pravasi Rojgar” என்ற செயலியை நடிகர் சோனு சூட் தொடங்கவுள்ளார்.

நடிகர் சோனு சூட், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் வில்லனாகவும், துணை வேடங்களிலும் நடிக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ஜாக்கிசான், சல்மான்கான், அஜித், மகேஷ் பாபு, சிம்பு உள்ளிட்டவர்களுடன் நடித்துள்ளார்.இவர் இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் பல உதவிகளை செய்து வந்தார். தினசரி உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கியதோடு, ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்து உதவினார்.

இந்த நிலையில் தற்போது கொரோனாவால் வேலையிழந்து அவதிப்படும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை தேட உதவும் வகையில் “Pravasi Rojgar” என்ற ஆப் ஒன்றை இன்று முதல் தொடங்கவுள்ளார். கட்டுமானம், ஆடை, உடல்நலம், பொறியியல், பிபிஓக்கள், செக்கியூரிட்டி, ஆட்டோ மொபைல், ஈ-காமர்ஸ் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் ஆகியவற்றிற்கான வேலைவாய்ப்புகளை 500புகழ் பெற்ற நிறுவனங்களுடன் இணைந்து இந்த ஆப் தொடங்க உள்ளது.

மேலும் ஏழு நகரங்களான பெங்களூர், ஹைதராபாத், கோயம்புத்தூர், அகமதாபாத், டெல்லி, மும்பை மற்றும் திருவனந்தபுரம் பகுதிகளில் 24 மணி நேரத்திற்கான ஹெல்ப்லைன் கொண்ட ஆதரவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.அவை வேலை தேடும் மக்களுக்கு உதவும் என்று கூறப்படுகிறது. சோனு சூட்டின் இந்த முயற்சிக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். வேலையிழந்து வாடும் மக்களுக்கு இந்த செயலி பயன்படும் என்று கருதப்படுகிறது.