#Breaking:”காலதாமதமின்றி குடும்ப அட்டைகள்” – அதிகாரிகளுக்கு முதல்வர் அதிரடி அறிவிப்பு…!

குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு காலதாமதமின்றி அதனை வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கூட்டுறவு,உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் அவர்கள் அதிகாரிகளிடம் கூறியதாவது: “குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பிப்பவர்களுக்குக் காலதாமதமின்றி குடும்ப அட்டைகள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ரேசன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க வேண்டும்.அப்பொருட்களின் தரத்தை அதிகாரிகள் உறுதி செய்திட வேண்டும்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடனுதவி கோரும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள்,மகளிர் தொழில்முனைவோர், சிறு வணிகர்கள், மாற்றுத்திறனாளிகள், உள்ளிட்டவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திட கூட்டுறவுச் சங்கங்கள் வாயிலாகத் தகுதியானவர்களுக்குக் கடன் வழங்கிட வேண்டும்.

பொது விநியோகத் திட்டத்தை முழுவதுமாக கணினிமயமாக்குதல்.மேலும், பெண் பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருதல்  போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்”,என்று  அறிவுறுத்தியுள்ளார்.