ககன்யான் திட்டம்;விகாஸ் என்ஜின் சோதனை வெற்றி – எலோன் மஸ்க் வாழ்த்து …!

ககன்யான் திட்டம்;விகாஸ் என்ஜின் சோதனை வெற்றி – எலோன் மஸ்க் வாழ்த்து …!

விகாஸ் எஞ்சினின் சோதனையை வெற்றிகரமாக நடத்தியதற்காக இஸ்ரோ நிறுவனத்திற்கு,ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக விமானப்படையைச் சேர்ந்த 4 பேரையும் இஸ்ரோ தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி நடந்து முடிந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக இத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், ககன்யான் திட்ட விண்கலத்தில் பயன்படுத்த உள்ள விகாஸ் என்ஜின் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நெல்லை மாவட்டத்திலுள்ள மகேந்திரகிரி ஆய்வகத்தில் 240 விநாடிகள் நடந்த இந்த என்ஜின் சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும், இறுதிக்கட்ட சோதனை ஒன்றரை மாதங்களில் நடைபெறும் எனவும் இஸ்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ககன்யான் திட்டத்தின் கீழ் புவியின் தாழ்வட்டப் பாதைக்கு மனிதர்களை அனுப்பும் வகையில் விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது.

விகாஸ் என்ஜின் சோதனை வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து பலரும் இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில்,டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியான எலோன் மஸ்க்,இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதில்,இந்திய கொடியும் இடம் பெற்றுள்ளது.

இஸ்ரோவின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விண்வெளித் திட்டம் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடியால் முதல் முறையாக அறிவிக்கப்பட்டது.இதன் ஆரம்ப இலக்கு 2022 ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவின் 75 வது ஆண்டு சுதந்திர தினத்தின் நிறைவுக்கு முன்னர் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் பயணத்தை தொடங்குவதாகும். இந்த திட்டத்திற்காக,இஸ்ரோவின் ஹெவி-லிப்ட் லாஞ்சர் ஜி.எஸ்.எல்.வி எம்.கே.III பயன்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube