Rajiv Kumar

One Nation One Election: இந்த திட்டத்தை செயல்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.. தலைமை தேர்தல் ஆணையர்!

By

அரசியல் வட்டாரத்தில் ஒருபக்கம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், மறுபக்கம் ஒரே நாடு ஒரே தேர்தல், நாட்டின் பெயர் பாரத் என மாற்றம் என பல்வேறு நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதில், குறிப்பாக நாட்டில் நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நடைமுறையை செயல்படுத்த மத்திய பாஜக அரசு முனைப்பு காட்டி வருகிறது.

ஒரே நேரத்தில் தேர்தல் என்ற நடைமுறை சாத்தியமா என்பது குறித்து ஆராய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு நேற்று முதலாவது ஆலோசனை கூட்டத்தையும் நடத்தி இருந்தது. அதுமட்டுமில்லாமல், வரும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான மசோதாவை தாக்கல் செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மறுபக்கம் மத்திய அரசின் ஒரே நாடு தேர்தல் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை செயல்படுத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் செய்தியாளர்களிடம் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு குறித்த காலத்துக்கு முன்னதாக தேர்தல் நடத்த வேண்டியது கடமை. புதிய அரசு அமைந்த பின், நாடாளுமன்ற முதல் அமர்வு தொடங்கிய நாளில் இருந்து 5 ஆண்டுகள் இருக்கும். இந்த 5 ஆண்டுகள் முடிவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாக தேர்தல் ஆணையம் பொதுத் தேர்தலை அறிவிக்கலாம்.

இந்த விதிமுறைகள் தான் சட்டமன்ற தேர்தலுக்கும் உள்ளது என்றார். மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த கேள்விக்கு, நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தயாராக இருக்கிறோம் எனவும் தெரிவித்த அவர், எம்பி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் அக்.5-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் புதிய வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அட்டையில் திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம் எனவும் கூறினார்.