“மாணாக்கர்களே, இனி இந்த அரசை நம்பாதீர்கள்” – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்.!

நீட் தேர்வு முடிவு அச்சத்தால் உயிரிழந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி சௌந்தர்யாவின் குடும்பத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

மருத்துவ சேர்க்கைகான நீட் தேர்வு கடந்த 12 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை தமிழகத்திலிருந்து 1.10 லட்சம் பேர் எழுதியிருந்தனர்.

அதன்படி,தேர்வு எழுதிய வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தலையாரம்பட்டு கிராமத்தில் கூலித் தொழிலாளர்களான திருநாவுக்கரசு மற்றும் ருக்மணி தம்பதியின் மகளான செளந்தர்யா என்ற மாணவி நீட் தேர்வு முடிவு தோல்வி பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.நீட் தேர்வு சரியாக எழுதவில்லை என்ற விரக்தியில் இன்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில்,உயிரிழந்த மாணவி சௌந்தர்யாவின் குடும்பத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி  ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

NEET -க்கு மேலும், வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றியம், தலையாரம்பட்டு கிராமத்தை சேர்ந்த T.சௌந்தர்யா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி அறிந்து, பெற்றோராக எனது மன வருத்தத்தைச் சொல்ல வார்த்தைகளே இல்லை.

நான், 14.09.2021 அன்று வெளியிட்ட, அறிக்கையின்படி, உடனே ஆசிரியர், உளவியல் நிபுணர் மற்றும் கல்வியாளர் அடங்கிய குழுவை அமைத்து, நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனதில் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் வழங்குங்கள் என்று திமுக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

மாணவச் செல்வங்களே, விபரீதமான இத்தகைய முடிவினை இனி ஒருபோதும் எடுக்காதீர்கள் என்று உங்களை பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். மாணாக்கர்களே, இனி இந்த அரசை நம்பாதீர்கள். நான் நேற்றே கூறியதுபோல், மருத்துவர் தான் ஆக வேண்டும் என்று இல்லை.42-க்கும் மேற்பட்ட மருத்துவ இணை படிப்புகள் உள்ளன.

“மாணவன் நினைத்தால் நடத்திக் காட்டுவான் அவன் நெஞ்சம் ஒரு நெருப்பு அவன் நேர்மையின் மறு பிறப்பு” என்ற பாடல் வரிகளை இங்கு நினைவு கூறுகிறேன். மாணவி சௌந்தர்யாவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்”,என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்னர்,நீட் தேர்வு பயத்தால் சேலம் மாவட்டம் கூழையூரைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவரும்,நீட் தேர்வு எழுதி தோல்வி பயத்தால் அரியலூர் சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த கனிமொழி என்ற மாணவியும் தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.