முதல்வர் மு.க.ஸ்டாலின் பொய்யை தவிர எதுவும் பேசமாட்டார் – இபிஎஸ்!

Edappadi K Palaniswami : முதல்வர் ஸ்டாலின் பொய்யை தவிர எதுவும் பேசமாட்டார் என எடப்பாடி பழனிசாமி  கூறியுள்ளார்.

மக்களவை தேர்தல் நெருங்கிய நிலையில் பல அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. அந்த வகையில், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தருமபுரி மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர் ஆர்.அசோகனை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் வகையில் கூட்டம் நடத்தி பிரச்சாரம் செய்தார்.

அப்போது,அதில்  எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக கட்சியை விமர்சித்தும் பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” இதற்கு முன்னதாக  இதே தருமபுரி மாவட்டத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தின் போது முதல்வர் ஸ்டாலின் முந்தைய அதிமுக ஆட்சி இருந்தபோது  இருண்ட ஆட்சி என்று எங்களை குற்றம் சாட்டி பேசி இருந்தார்.

அவருக்கு நாங்கள் இப்போது சொல்லி கொள்வது ஒன்று தான் இதுவரை எந்த அரசாங்கமும் செயல்படுத்த முடியாத பல மக்கள் நல திட்டங்களை முந்தைய அதிமுக அரசு மட்டும் தான்  செயல்படுத்தி இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின்  பொய் மட்டுமே தான் பேசி வருகிறார். அவருடைய ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.அவருடைய இந்த ஆட்சியில் தான் கொலை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை மாற்றும் கஞ்சா மிகவும் அதிகமாக நடந்துகொண்டு இருக்கிறது.

இதனை எல்லாம் தடுத்து நிறுத்த முடியாமல் முதல்வர் மு.க.ஸ்டாலின் திணறி கொண்டு ஒரு  பொம்மை முதல்வராக அவர் ஆட்சி செய்து வருகிறார். இதற்கு முன்னதாக எங்களுடைய அதிமுக ஆட்சியின் போது மாணவர்கள் கைகளில் மடிக்கணினி விளையாடியது. ஆனால் இப்போதெல்லாம் பாருங்க அவருடைய இன்றைய ஆட்சியில் போதைப்பொருட்கள் விளையாடி கொண்டு இருக்கிறது.

திமுக-வின் தேர்தல் தொடர்பான ‘இந்தியாவைக் காக்க ஸ்டாலின் அழைக்கிறேன்’ என்ற விளம்பரத்தை பார்த்தால் என்னுடைய நினைவுக்கு  கூரை ஏறி கோழி பிடிக்காதவர் வானம் ஏறி வைகுண்டம் போவாராம் என்ற அந்த பழமொழி தான் தோணுகிறது. இதே தருமபுரி மாவட்டத்தில் தான் பல நீர்ப்பாசன திட்டங்களை திமுக அரசு  இன்னும் செயல்படுத்தாமல் அப்படியே கிடப்பில் போட்டு இருக்கிறது. எனவே, இந்த விஷயங்கள் எல்லாம் மாறவேண்டும் என்றால் மக்களே நீங்கள் அதிமுக வேட்பாளருக்கு வாக்களியுங்கள்”  எனவும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.