72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் டாக்டர் வி.சாந்தாவின் உடல் தகனம்!

டாக்டர் வி.சாந்தாவின் உடலுக்கு அரசு மற்றும் காவல் துறை மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டப்பின், உடல் தகனம் செய்யப்பட்டது.

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவரும், சமூக சேவகருமான டாக்டர் வி.சாந்தா அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். 93 வயது உடைய இவரது வாழ்நாள் பலருக்கும் வாழ்வளித்த ஒன்றாக இருந்துள்ளது. சாந்தாவின் மறைவிற்கு முதல்வர், துணை முதல்வர், பிரதமர், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர்.

மேலும், மருத்துவர் சாந்தாவின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரின் இறுதி சடங்குகளின் போது காவல்துறை மரியாதை அளிக்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அவரின் உடல், பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அங்கு அவரின் உடலுக்கு அரசு மற்றும் காவல் துறை மரியாதையுடன் 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டப்பின், மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது. டாக்டர் வி.சாந்தாவின் இறுதி விழாவில் பொதுமக்கள், மருத்துவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.