அறிவிக்கும் முன் யோசிப்பதில்லையா?- அதிமுக அமைச்சர்களுக்கு, முக ஸ்டாலின் கேள்வி.!

அறிவிக்கும் முன் யோசிப்பதில்லையா என அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணிக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள உதவியாளர், வயர்மேன் பணியிடங்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் ஆட்கள் நியமிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு திமுக உள்ளிட்ட பல எதிர்ப்புகள் வந்ததை தொடர்ந்து, தனியார் நிறுவனம் மூலம் மின்வாரியத்துக்கு 30 ஆயிரம் பேரை தேர்வு செய்யும் ஆணை ரத்து என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி கழிவு உருவாக்குபவர்கள் வகைப்படுத்தப்பட்டு அதற்கேற்ப திடக்கழிவு மேலாண்மைக்கான பயனாளர் கட்டணத்தை சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும் என்றும் அதன் அடிப்படையில் திடக்கழிவு மேலாண்மை பயனாளர்களின் கட்டணத்தை சொத்து வரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இன்று குப்பைக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற உத்தரவை காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுகிறது என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அறிவிக்கும் முன் யோசிப்பதில்லையா என முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், மின் வாரியப் பணிகளை தனியாருக்கு ஒப்படைப்பதை எதிர்த்துப் போராடுவோம் என்றேன். வாபஸ் பெற்றார் அமைச்சர் தங்கமணி. குப்பை கொட்டவும் வரி அறிவிப்பை ரத்து செய்யாவிட்டால், கழக ஆட்சி செய்யும் என்றேன். வாபஸ் பெற்றார் அமைச்சர் வேலுமணி. அறிவிக்கும் முன் யோசிப்பதில்லையா? எண்ணித்துணிக கருமம்! எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில், முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசும், மின்துறை அமைச்சர் தங்கமணியும் ஊழல் செய்வதற்காக மின்வாரியத்தில் ஒவ்வொரு பகுதியாக தனியாருக்கு தாரை வாத்துவருகிறார்கள். மாநகராட்சி தேர்தலை நடத்தாமல் மக்கள் மீது சுமையை அடுக்கடுக்காக ஏற்றி கொண்டிருக்கிறார்கள். அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் ஊழல்களுக்கு தண்டனையாக சென்னை மக்கள் அபராதம் கட்ட வேண்டுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்