உள்நாட்டு விமான சேவை : 630 விமானங்கள் ரத்து - நிர்வாகம்.!

2 மாதங்களுக்கு பிறகு முதல் நாளான நேற்று நாடு முழுவதும் 630 விமானங்கள் ரத்து

By balakaliyamoorthy | Published: May 26, 2020 12:58 PM

2 மாதங்களுக்கு பிறகு முதல் நாளான நேற்று நாடு முழுவதும் 630 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் 4 கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பஸ், ரெயில், விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. பின்னர் வெளிநாடுகளில் சிக்கிக் கொண்ட இந்தியர்களை மீட்டு வருவதற்காக மட்டும் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. 4-வது கட்ட ஊரடங்கு வருகிற 31-ம் தேதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில், உள்நாட்டு விமான போக்குவரத்து 25-ம் தேதி நேற்று முதல் தொடங்கும் என்று அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்திருந்தார். 

மேலும், விமானத்தில் பயணிக்கும் பயணிகள் கட்டாயம் மாஸ்க் அணியவேண்டும் என்றும் ஆரோக்கிய சேது செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. குறிப்பாக வைரஸ் அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, மேற்கு வங்கம் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் விமானங்கள் இயக்கப்பட்டன. முதல் விமானம் டெல்லியில் இருந்து மராட்டிய மாநிலம் புனே புறப்பட்டு சென்றது. இதேபோல் மும்பையில் இருந்து முதல் விமானம் பீகார் தலைநகர் பாட்னா கிளம்பிச் சென்றது.

இந்த நிலையில், மும்பை, ஐதராபாத்தில் இருந்து கோவைக்கு நேற்று வர வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பிற நகரங்களில் இருந்து சென்னைக்கு 25 விமான சேவைகளுக்கு மேல் இயக்க வேண்டாம் என்று மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக்கொண்டது. இதனையடுத்து, குறைவான பயணிகள் உள்ளிட்ட காரணங்களால் முதல் நாளான நேற்று நாடு முழுவதும் 630 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளானர். நேற்று நாடு முழுவதும் 532 விமானங்கள் இயக்கப்பட்டதாகவும், அவற்றில் 39 ஆயிரத்து 231 பயணிகள் பயணம் செய்ததாகவும், அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc