DogeRAT

DogeRAT: ஆண்ட்ராய்டு பயனர்களை பாதிக்கும் மால்வேர்.! ஆலோசனை வழங்கும் மத்திய அரசு.!

By

தொழில்நுட்ப உலகமாக மாறியிருக்கும் இந்த காலக்கட்டத்தில் எந்த அளவு நன்மை இருக்கிறதோ அந்த அளவு தீமையும் இருக்கிறது. அதன்படி, மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டர் போன்ற சாதனங்களில் மால்வேர் போன்ற ஆபத்தான மென்பொருள் பல வழிகளில் பரவி வருகிறது. இதன் மூலம் பயனர்களின் தகவல்கள் திருடுபோவதோடு மட்டுமல்லாமல் அவர்களது சாதனங்களிலும் பல சிக்கல்கள் ஏற்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக தற்போது இந்தியாவில் ஆண்ட்ராய்டு பயனர்களை குறிவைத்து, முக்கியமான தகவல்களை அணுகக்கூடிய மால்வேர் ஒன்று பரவி வருவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. அதன்படி, DogeRAT எனப்படும் ஓப்பன் சோர்ஸ் ரிமோட் அக்சஸ் ட்ரோஜன் (RAT) மால்வேர் ஆனது பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தகவலை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள பிரிவான டிஃபென்ஸ் அக்கவுண்ட்ஸின் கண்ட்ரோலர் ஜெனரல் வெளியிட்டுள்ளது. அதோடு இந்த மால்வேர் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்கான ஆலோசனைகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. இது முதலில் சைபர் செக்யூரிட்டி ஸ்டார்ட்அப் நிறுவனமான கிளவுட்செக்கால் (CloudSEK)கண்டறியப்பட்டுள்ளது என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

எப்படி பரவுகிறது.?

ஆன்ட்ராய்டு பயனைர்களை இலக்காக கொண்டு பரவி வரும் இந்த மால்வேர், நாம் யாரு எதிர்பார்க்காத செயலிகளில் இருந்து பரவுகிறது. அதாவது இணைய உலாவியான ஓபரா மினி, வீடியோ பார்க்கும் செயலியான யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஓபன் ஏஐ நிறுவனத்தால் உருவாக்கபட்ட சேட் ஜிபிடி மூலமாக உங்களது மொபைல் போனில் பரவுகிறது.

என்ன செய்கிறது.?

இந்த மால்வேர் இது நீங்கள் இருக்கும் இடத்தைக் கண்காணிப்பது, நீங்கள் பேசும்போது உங்கள் மொபைலில் இருக்கும் மைக்ரோஃபோனைக் கண்காணித்து நீங்கள் பேசுவதை பதிவு செய்வது, உங்களின் அழைப்பு விவரங்களை எடுப்பது, கிளிப்போர்டு மற்றும் நோட்டிபிகேஷன் பதிவுகளை அணுகுவது போன்ற திறன்களைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.

DogeRAT மால்வேர் உங்கள் மொபைலில் பரவியவுடன் உங்கள் மொபைலைக் கட்டுப்படுத்தி, ஸ்பேம் செய்திகளை அனுப்பலாம். உங்கள் அனுமதி இல்லாமல் பண பரிமாற்றம் செய்யலாம். உங்கள் தகவல்களை பரிமாறிக்கொள்வதோடு மொபைலில் இருக்கும் கேமரா மூலம் படம் எடுக்கலாம், ஸ்கிரீன் ஷாட்களை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

மத்திய அரசு ஆலோசனை:

இந்த தாக்குதலில் இருந்து தப்பிக்க நம்பகத்தன்மையற்ற இணையதளங்களில் இருந்து, மூன்றாம் தரப்பு செயலிகளை (Third Party Apps) பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யக்கூடாது. அவ்வாறு எந்த செயலி தேவைப்பட்டாலும் கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெரியாத எண்ணில் இருந்து வரும் செய்திகள் மற்றும் மின்னஞ்சல்களில் வரும் போலியான இணைப்புகளை கிளிக் செய்யக் கூடாது. மேலும், பாதுகாப்பாக இருக்க உங்கள் மொபைல் போனில் சாப்ட்வேரை அப்டேட்டில் வைத்திருக்க வேண்டும். அதோடு வைரஸ்களை உள்நுழைய விடாமல் தடுக்கும் பயன்பாட்டையும் இன்ஸ்டால் செய்து வைத்திருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Dinasuvadu Media @2023