“நீங்கள் பதவி காலத்தில் கூறிய பொய்களுக்காக வருந்தியதுண்டா?” – எதிர்பாராத கேள்விக்கு திகைத்த அதிபர் டிரம்ப்!

“உங்கள் பதவி காலத்தில் நீங்கள் சொன்ன பொய்களுக்கு வருந்தியதுண்டா?” என பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அதிபர் டிரம்ப் திகைத்து போனார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் மக்களிடையே உரையாற்றியபோதும் அவர் ஏராளமான பொய் செய்திகளையும், தவறான தகவல்களையும் தெரிவித்துள்ளதாக அவர்மீது தொடர்ந்து குற்றங்கள் சாட்டப்பட்டுக் கொண்டே வருகிறது.

அந்தவகையில், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்பிடம் ஹஃபிங்டன் போஸ்ட் நிறுவனத்தின் பத்திரிகையாளர் ஷிரிஷ் டேம், “உங்கள் பதவி காலத்தில் நீங்கள் சொன்ன பொய்களுக்கு வருந்தியதுண்டா?” என கேள்வி எழுப்பினார். இதனை சற்றும் எதிர்பாராத அதிபர் டிரம்ப், திகைத்து போனார்.

அவரிடம் தொடர்ந்து அதே கேள்வியை கேட்க, சிறிது நேரம் அமைதியாக இருந்த டிரம்ப், இந்த கேள்வியை புறக்கணித்து, மற்றொரு பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார். அந்த பத்திரிகையாளர், அதிபர் டிரம்பிடம் இந்த கேள்வியைக் கேட்க 5 ஆண்டுகள் காத்துக் கொண்டிருந்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.