கிரிக்கெட் வீரர்களை பிரச்சாரத்திற்கு நிர்பந்திக்க வேண்டாம் – கார்த்திக் சிதம்பரம்.!

கிரிக்கெட் வீரர்களை ட்விட்டர் பிரச்சாரத்திற்கு நிர்ப்பந்திக்க வேண்டாம் காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெல்லியில் விவசாயிகள் வேளாண் சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த போராட்டம் தற்போது உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது. நேற்று, உலகப் புகழ்பெற்ற அமெரிக்க பாப் பாடகி ரிஹானா தனது ட்விட்டர் பக்கத்தில், நாம் ஏன் விவசாயிகள் போராட்டம் குறித்து பேசாமல் இருக்கிறோம்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவின் இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது. வெளிப்புற சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாம். ஆனால், நமது உள்நாட்டு விவகாரங்களில் பங்கேற்க இயலாது. இந்தியாவை பற்றி இந்தியர்களுக்கு தெரியும். இந்தியர்களே முடிவு எடுப்பார்கள். ஒரு தேசம் ஒற்றுமையாக இருக்கட்டும் என்று கண்டனம் தெரிவிக்கும் வகையில் பதிவிட்டிருந்தார்.

சச்சின் டெண்டுல்கர் பதிவிற்கு அடுத்து, காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். அதாவது, கிரிக்கெட் வீரர்களை ட்விட்டர் பிரச்சாரத்திற்கு நிர்ப்பந்திக்க வேண்டாம் என பிசிசிஐக்கு தான் வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சச்சினை தொடர்ந்து, கோலி, ரோகித், ரெய்னா, தவான் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களும், அக்ஷய் குமார் போன்ற சினிமா பிரபலங்களும் வெளிநாட்டு பிரபலங்கள் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்