உள்ளாட்சித் தேர்தலில் திமுக – விசிக கூட்டணி தொடரும் – திருமாவளவன் அறிவிப்பு!

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடரும் என்று அக்கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கி 22-ம் தேதி மாலை 5 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இதனைத்தொடர்ந்து, ஊரக உள்ளாட்சி தேர்தலின் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் பிரச்சாரம் என தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அதன்படி, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனுக்களை பெற்று வருகிறது.

இதனிடையே, திமுக கூட்டணி குறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில், மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளுடன் பேசி சுமுக முடிவு எடுக்க வேண்டுமென மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களை வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடரும் என்றும் தேர்தலில் திமுக கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் எனவும் அக்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அதிமுக கூட்டணியிலிருந்து பாமக ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதுபோன்று அமமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிகவும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்