“நிர்வாக சீர்கேடுடைய திமுக அரசு;அம்பேத்கரை வைத்து வியாபாரம் செய்யும் திருமாவளவன் ,பாலகிருஷ்ணன்-அண்ணாமலை குற்றச்சாட்டு!

சென்னை:விசிக தலைவர் திருமாவளவன்,கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் அம்பேத்கரை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர் என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியாவின் சட்டமேதை அம்பேத்கரின் 65-வது நினைவு நாளான இன்று  சென்னை ராஜாஜி சாலையில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பட்டியலின சமுதாய தலைவர் பொன்பாரதி உள்ளிட்ட பாஜகவினர் மரியாதை மேளதாளங்கள் முழங்க, தீச்சுடர் ஏந்தி,நடந்து ஊர்வலமாக வந்து மரியாதை செலுத்தினார்கள்.

இதனையடுத்து,செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை கூறியதாவது:

“பட்டியல் இன சமுதாய மக்களை முன்னேற்றுவதற்கான அரசு பாஜக அரசு.அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய பொறுப்புகளில் இவர்கள் உள்ளார்கள்.கட்சியை வழிநடத்துகிறார்கள்.

டாக்டர் அம்பேத்கரும் இப்படிப்பட்ட அரசைதான் கொண்டு வரவேண்டும் என்று நினைத்தார்.எனினும்,அம்பேத்கரின் முழு சித்தாந்தத்தையும் கொண்டு வர வேண்டும் என்றுதான் பாஜக அரசு பாடுபட்டுக்கொண்டிருக்கிறது.

ஆனால்,தமிழகத்தில் திமுக அரசு வந்த இந்த 6 மாதத்தில் காவல்துறை அவலநிலைமை உள்ளிட்ட நிறைய விசயங்கள் தலை தூக்கியுள்ளது. குறிப்பாக,11 மணிக்கு மேல் எந்த சந்துகளுக்கு போனாலும் கஞ்சா விற்பதை காணலாம்.6 மாதத்தில் ஒரு அரசு இந்த அளவுக்கு நிர்வாக சீர்கேடு உடையதாக உள்ளதை நான் பார்த்தது கிடையாது.

விசிக தலைவர் திருமாவளவன்,கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் அம்பேத்கரை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.ஆனால்,பாஜக அவர்களைப்போல அல்ல.மாறாக,அவர் படித்த வளர்ந்த,வாழ்ந்த இடம் என 5 இடங்களில் அம்பேத்கருக்கு முதன்முதலில் நினைவிடம் கட்டியது பாஜகதான். அம்பேத்கரின் கனவை நனவாக்கிவருவது பாஜகதான்; அம்பேத்கரின் சிந்தனை, புகழை வெளிக்கொண்டு வருவதும் பாஜகதான்”,என்று தெரிவித்துள்ளார்.