#DelhiElectionResults : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பிரிந்த வேட்பாளர்கள் பின்னடைவு.!

  • ஆம் ஆத்மியிலிருந்து கட்சியிலிருந்து பிரிந்த அல்கா லம்பா காங்கிரஸ் சார்பாகவும், கபில் மிஸ்ரா பாஜக சார்பாகவும் தேர்தலில் போட்டியிட்டனர். தற்போதைய நிலவரப்படி இரண்டு பேருமே தேர்தலில் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.

ஆம் ஆத்மியிலிருந்து கட்சியிலிருந்து மாறிய அல்கா லம்பா, கபில் மிஸ்ரா ஆகியோர் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். மொத்தம் 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 62.59 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், இன்று காலை முதல் 22 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதில் 70 தொகுதிகளில் தற்போது 52 தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 18 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. குறிப்பாக புதுடெல்லி தொகுதியில் அரவிந்த் கேஜ்ரிவால் முன்னிலை வகித்து வருகிறார். பட்பர்கஞ்ச் தொகுதியில் மணீஷ் சிசோடியா முன்னிலையில் உள்ளார்.

இதனிடையே டெல்லி சாந்தினி சவுக் தொகுதியில் இருந்து அல்கா லம்பா ஆம் ஆத்மி கட்சி சார்பில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர். பின்னர் ஆம் ஆத்மி கட்சியை விட்டு விலகி விட்டதாக கூறி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதன் அடிப்படையில் அல்கா லம்பாவை சட்டப்பேரவையில் இருந்து தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் கடந்த அக்டோபர் மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். டெல்லியில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அல்கா லம்பா, சாந்தினி சோக் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நிலையில், தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி அல்கா லம்பா பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசில் நீர்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கபில் மிஸ்ரா. இவர் 2017-ம் ஆண்டு மே மாதம் 6-ம் தேதி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து, கேஜ்ரிவால் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக கபில் மிஸ்ரா குற்றம் சாட்டினார். அதன்பின் பாஜகவில் இணைந்த கபில் மிஸ்ரா மாடல் டவுன் தொகுதியில் போட்டியிட்டார். தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி கபில் மிஸ்ரா பின்னடைவைச் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்