விவசாயிகள் போராட்டம் ஸ்தம்பித்த டெல்லி எல்லைப்பகுதிகள்..!

டெல்லியையும், ஹரியானவையும் இணைக்கும் குர்கான் எல்லை பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேலாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து டெல்லியில் விவசாயிகள் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர விவசாயிகளுடன் மத்திய அரசு 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. இருப்பினும் எந்த ஒரு முடிவும் இதன்மூலம் கிடைக்கவில்லை.

வேளாண் சட்டங்களை அடுத்த ஒன்றரை வருடத்திற்கு நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்தும், முழுமையாக வேளாண் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என கோரி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விலைவாசி உயர்வை கண்டித்தும் இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

இந்நிலையில், டெல்லி, ஹரியானா,பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சாலை மற்றும் ரயில் மறியலில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.  டெல்லியையும், ஹரியானவையும் இணைக்கும் குர்கான் எல்லை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 2 மணி நேரத்திற்கு மேலாக நெரிசல் ஏற்பட்ட இந்த சாலை 16 வழி சாலை என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு பெரிய சாலையிலேயே கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றன.

மேலும், குருகிராம், நொய்டா , காசியாபாத் உள்ளிட்ட எல்லை பகுதியில் ஏராளமான வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றனர்.

author avatar
murugan