டெல்லி:”என் அம்மாவுக்கு ரொம்ப சீரியஸா இருக்கு;ஆக்சிஜன் தாருங்கள்”..! என்று மண்டியிட்டு கேட்கும் பெண்..!

“என் அம்மாவுக்கு ரொம்ப சீரியஸா இருக்கு,ஆக்சிஜன் இருந்தா தாருங்கள்” என்று ஒரு பெண் மண்டியிட்டு தனது தாயின் உயிரை காப்பாற்றுவதற்காக ஆக்ஸிஜன் சிலிண்டரை தருமாறு கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

கொரோனா வைரஸின் இரண்டாவது அலையால் நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால்,நாட்டில் உள்ள பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து,தலைநகர் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாத காரணத்தினால்,ஆக்சிஜன் நிரப்பும் இடங்களுக்கே சென்று மணிக்கணக்காக வரிசையில் காத்திருந்து ஆக்சிஜன் வாங்கும் நிலைக்கு கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்,டெல்லியில் வசிக்கும் ஸ்ருதி சஹா என்ற பெண்,தனது தாய்க்கு கொரோனா பாதிப்பின் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் டெல்லியின் இண்டஸ்ட்ரியல் பகுதிகளில் உள்ள ஆக்சிஜன் நிரப்பும் மையத்திற்கு வெளியே இருந்த காவலர்களிடம்,”உடனடியாக ஆலையை திறந்து விடுங்கள்,ஏனெனில்,என் அம்மா மிகவும் ரொம்ப சீரியஸாக உள்ளார்.ஆக்சிஜன் கிடைத்தால்தான் என் அம்மாவை காப்பாற்ற முடியும்” என்று மண்டியிட்டுக் கேட்டுள்ளார்.

இதனையடுத்து,சிறிது நேரம் கழித்து வந்த போன் காலில் ஸ்ருதியின் அம்மா இறந்துவிட்டதாக தகவல் வந்தது.இந்த செய்தியைக் கேட்டதும் ஸ்ருதி மனமுடைந்துப் போய் கதறி அழுதார்.இதைப்பார்த்துக் கொண்டிருந்த சிலர் ஸ்ருதியை ஆறுதல் படுத்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

எனினும்,இதுமாதிரியான சம்பவம் இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.எனவே,ஆக்சிஜன் பற்றாக்குறையை சரி செய்ய மத்திய அரசு மேற்கொண்டு கூடுதல் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.