“பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்” – சீமான் கண்டனம்..!

மனிதத்தைக் கொன்று மதத்தை வளர்க்கத் துடிக்கும் பேராபத்துமிக்க பாஜக அரசின் அநீதிக்கெதிரான நீதியை நிலைநாட்ட ஒவ்வொரு குடிமகனும் முன்வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக அரசு,அம்மாநிலத்தில் உள்ள தர்ரங் மாவட்டத்தின் சிபஜார் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு புறம்போக்கு நிலங்களை மீட்டு வேளாண் திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

அதன்படி,ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பதற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நூற்றுக்கணக்கான போலீசார் தோல்பூர் பகுதிக்கு சென்றனர். இதற்கு  அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், போலீசாருக்கும் அவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.இதனையடுத்து,முதலில் போலீசார் தடியடியையும்,பின்னர் துப்பாக்கி சூடும் நடத்தினர்.

அதுமட்டுமல்லாமல்,துப்பாக்கியால் சுடப்பட்டு கீழே விழுந்த ஒருவரை போலீசார் கண்மூடித்தனமாக தாக்கினார்கள்.இந்த தாக்குதலில் பொதுமக்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர் .மறுபுறம்,காவலர்கள் தரப்பில் 9 பேர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது.

போலீசாரைத் தொடர்ந்து,கீழே விழுந்த அந்நபர் மீது அரசு புகைப்படக் கலைஞர் பிஜோய் போனியா என்பவர் கொடூரமாக ஏறி மிதிக்கும் வீடியோ மற்றும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் மக்கள் பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில்,அசாம் மாநிலத்தை ஆளும் பாஜக அரசின் செயல் அதிர்ச்சியளிக்கிறது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“அரசுக்குச் சொந்தமான நிலத்தை மீட்பதாகக்கூறி, காலங்காலமாக வாழ்ந்து வரும் மண்ணின் மக்களை மாற்று இடம்கூட வழங்காது வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் அசாம் மாநிலத்தை ஆளும் பாஜக அரசின் செயல் அதிர்ச்சியளிக்கிறது.

சனநாயகத்திற்கு எதிரான இத்தகைய எதேச்சதிகாரப்போக்கை எதிர்த்துப் போராடுபவர்கள் மீது அரச வன்முறையினை ஏவி. அப்பாவி மக்களை ஈவு இரக்கமின்றித் தாக்குவதும், சுட்டுக் கொல்வதுமான காட்சிகள் காண்போர் நெஞ்சை பதைபதைக்கச் செய்கின்றன. அதிலும் உச்சபட்சமாக. பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் சூழ்ந்துகொண்டு கொடூரமாகத் தாக்கி சுட்டுக்கொன்று. இறந்தவரது உடலினைக் காலால் மிதித்து. அதன்மீது ஏறிநின்று குதிக்கும் கொடூரக்காட்சிகள் குருதியை உறையச் செய்கின்றன.

இத்தனைக் கொடூரங்களுக்குக் பிறகும் அதற்காக வருத்தமோ. மன்னிப்போ. இரங்கலோ தெரிவிக்காது காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனத்தை நியாயப்படுத்திப் பேசும் அசாம் மாநில முதல்வர் கிமந்தா பிஸ்வாவின் அதிகாரத்திமிர் வன்மையான கண்டனத்திற்குரியது.

மனிதத்தன்மை உடைய எவராலும் ஏற்க முடியாத இக்கோரச் சம்பவத்தைத் துளியும் மனச்சான்றின்றி. குற்ற உணர்வின்றி நியாயப்படுத்திப் பேசுவதன் மூலம் பாஜக எனும் கட்சி மானுடகுலத்திற்கு எதிரானது என்பதை மீண்டுமொரு முறை மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

மனிதத்தைக் கொன்று மதத்தை வளர்க்கத் துடிக்கும் பேராபத்துமிக்க பாஜகவின் அதிகார வர்க்கத்திற்கு எதிராகவும். அவர்களது அரசப்பயங்கரவாதச் செயல்பாடுகளுக்கு எதிராகவும் ஒருமித்துக் குரலெழுப்பி அநீதிக்கெதிரான நீதியை நிலைநாட்ட ஒவ்வொரு குடிமகனும் முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்”,எனத் தெரிவித்துள்ளார்.