சுருண்டது ஆஸ்திரேலியா.,மிரட்டியது இந்தியா.! 2nd இன்னிங்ஸ் ஆரம்பம்.!

அடிலெய்டு பகலிரவு டெஸ்ட் 2ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் அபார பந்துவீச்சால் முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி நேற்று அடிலெய்டு மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 89 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து, 233 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய அனைத்து விக்கெட்டையும் இழந்து 244 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக மத்தேயு வேட், ஜோ பர்ன்ஸ் இருவரும் இறங்கினர். நிதானமாக விளையாடி வந்த மத்தேயு வேட் 15-வது ஓவரில் விக்கெட்டை இழக்க, இவரைத்தொடர்ந்து, ஜோ பர்ன்ஸ் அவுட் ஆனார். ஒருபக்கம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மார்னஸ் லாபுசாக்னே 47 ரன்களில் வெளியேறினார். இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இறுதியாக ஆஸ்திரேலியா 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கேப்டன் டிம் பெயின் மட்டும் சிறப்பாக விளையாடி 73 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்திய தரப்பில் அஸ்வின் 4, உமேஷ் யாதவ் 3, பும்ரா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளனர். முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை விட இந்தியா 53 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், தற்போது 2வது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி தொடக்க வீரரான பிருத்வி ஷா 4 ரன்களில் ஆட்டமிழக்க, மாயங்க் அகர்வால், ஜஸ்பிரீத் பும்ரா விளையாடி வருகின்றனர். ஒரு விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்