உலகில் முதல் முறையாக குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசியை அறிமுகம் செய்தது கியூபா!

உலகில் முதல் முறையாக குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி கியூபா நாட்டில் செலுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தற்பொழுது வரையிலும் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளிலும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியப்பட்டு செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், பல நாடுகளில் 18 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்களுக்கு தான் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

சில நாடுகளில் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், உலகிலேயே முதல் முறையாக இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி கியூபாவில் தொடங்கியுள்ளது. இதற்காக அப்டாலா மற்றும் சோபிரனா எனும் இரு தடுப்பூசிகளின் மருத்துவ பரிசோதனை முடிவடைந்துள்ள நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தொடங்கிய கியூபா, கடந்த திங்கள் கிழமை அதாவது நேற்று முதல் இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி போடும் பணியை தொடங்கி உள்ளது.

பல நாடுகள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட திட்டமிட்டிருப்பதாகவும், பரிசோதனை நடந்து கொண்டிருப்பதாகவும் அறிவித்திருந்தாலும், கியூபாவில் தான் முதல் முறையாக குழந்தைகளுக்கான தடுப்பூசி கண்டறியப்பட்டு போடப்பட்டுள்ளது. ஆனால் கியூபாவில் போடப்பட்டுள்ள குழந்தைகளுக்கான இந்த கொரோனா தடுப்பூசிக்கு இன்னும் உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

author avatar
Rebekal