“2021-ல் தல தோனியே சென்னை அணியின் கேப்டன்” – சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் நம்பிக்கை!

2021-ல் நடைபெறும் ஐபிஎல் தொடரிலும் தோனியே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தலைமை தாங்குவார் என அணியின் சி.இ.ஓ. காசிவிஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் முன்னணி அணியாக விளங்குவது, சீனியர் வீரர்களை கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. போட்டிகள் தொடங்கும் முன்னே ரெய்னா, ஹர்பஜன் சிங் தொடரில் இருந்து விலக, காயம் காரணமாக பிராவோவும் தொடரில் இருந்து விலகினார். இது, சென்னை அணிக்கு பெரும் தடுமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர் தோல்வியால் சென்னை அணி பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. மேலும், கேப்டனாக தோனி இந்தாண்டு ஐபிஎல்-லில் தனது கடமையை சரியாக செய்யவில்லை எனவும் விமர்சனங்கள் எழுந்தது. அதுமட்டுமின்றி, இளம் வீரர்களிடம் “ஸ்பார்க்” இல்லை-யென கூறியது, பெரியளவில் சர்ச்சைக்குள்ளானது. இதனைதொடர்ந்து அடுத்த நடந்த போட்டிகளில் இளம் வீரர்கள், தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தங்களிடமும் ஸ்பார்க் இருக்கிறது என நிரூபித்தும் காட்டினார்கள்.

இந்தநிலையில், 2021-ல் நடைபெறும் ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனியே தலைமை தாங்குவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ. காசிவிஸ்வநாதன் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், ஐபிஎல் போட்டியில் எங்களுக்காக பல முறை தோனி வெற்றிப் பெற்று கொடுத்துள்ளார். பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு சென்னை அணி தகுதி பெறாமல் இருப்பது இதுவே முதல்முறையாகும் என கூறிய அவர், இந்த சீசனில் எங்கள் அணி சரிவர விளையாடவில்லை என தெரிவித்துள்ளார். மேலும், 2021 ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு புதிய வீரர்களை தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.