கொரோனா தடுப்பூசி: பிரதமரை நேரில் சந்தித்து புள்ளி விவரங்களுடன் எடுத்துரைக்க வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்

தமிழகத்துக்கு கூடுதல் டோஸ் தடுப்பூசி தருமாறு பிரதமரிடம் நேரில் வலியுறுத்த வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்.

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோயிலிருந்து மக்களைக் காப்பதற்கான ஒரே வழி ‘தடுப்பூசி’ என்பதன் அடிப்படையில், இந்த ஆண்டு இறுதிக்குள் 96 கோடி டோஸ் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து அனைத்து மாநிலங்களுக்கும் விநியோகிக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டிற்குரியது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் 2021 இறுதிக்குள் 96 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டு விநியோகிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இது கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை நிச்சயம் தடுக்கும்.

இந்த ஆண்டு இறுதிக்குள் மத்திய அசால் கொள்முதல் செய்யப்படவுள்ள 96 கோடி தடுப்பூசிகளில், தமிழ்நாட்டு மக்கள் தொகையின் அடிப்படையில் 6.061% தடுப்பூசிகள் என மொத்தம் 6,33,43,935 தடுப்பூசிகளை மத்திய அரசிடமிருந்து பெற்று, 18-வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்ற இலக்கினை அடைய வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமை.

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர், இதில் உடனடியாக தனிக் கவனம் செலுத்தி, புள்ளி விவரங்களை பிரதமரை நேரில் சென்று எடுத்துரைத்து, குறைந்தபட்சம் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தடுப்பூசிகளைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என வலியுறுத்தியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்