“நவம்பரில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது” – சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்!

“நவம்பரில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது” – சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்!

நவம்பர் மாதத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணாநகர் மண்டலம், என்எஸ்கே சாலையில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமை சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பார்வையிட்டனர். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 90 ஆயிரம் பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் கருவி மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறதாகவும், சென்னையில் ஒருசில மண்டலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக கூறினார்.

மேலும் சென்னையில் 100 பேரிடம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டால், அதில் 10 பேருக்கும் கீழே தான் பாதிப்பு இருக்க வேண்டும் என்ற இலக்கை அடைந்துவிட்டதாகவும், இதுவரை கொரோனா தடுப்பு விதிகளை மீறியவர்களிடமிருந்து ரூ.3.9 கோடி வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவரைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னையில் இதுவரை 30 லட்சம் பேர் வீட்டுத் தனிமையை முடித்துக் கொண்டுள்ளனர். தற்போது வரை 2.25 லட்சம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அங்கு 50,000க்கும் அதிகமான காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளதாக கூறிய அவர், பரிசோதனை விகிதம் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், சென்னையில் கொரோனா பாதிப்பு விகிதம் 9% இருப்பதாகவும், அதனை 5% குறைப்பதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், முககவசம் அணியாமல் மக்கள் அலட்சியமாக இருப்பதாகவும், நவம்பர் மாதத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube