தொடரும் பலிகள்: ஆன்லைன் சூதாட்ட கொடுமைகளுக்கு முடிவு எப்போது? ராமதாஸ்

மத்திய, மாநில அரசுகளே ஆன்லைன் சூதாட்டம் என்ற ஆக்டபஸ் இன்னும் பல குடும்பங்களை வளைத்து சீரழிப்பதற்கு முன்பாக அதை தடை செய்யுங்கள் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். 
புதுச்சேரியை சேர்ந்த விஜயகுமார் ஆன்லைன் ரம்மியில் 30 லட்சத்தை இழந்த சோகத்தில் தற்கொலை செய்துகொண்டார்.ஆன்லைன் விளையாட்டு மூலம் தற்கொலை செய்து  கொள்வது தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் மோசடி மற்றும் பணப்பசிக்கு இன்னொரு இளைஞன் பலி ஆகியிருக்கிறான். இன்னும் வாழ்க்கையைக் கூட வாழத் தொடங்காத அவனது குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துள்ளது. ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தை இழந்து இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்து வரும் நிலையில் அதை அரசுகள் வேடிக்கைப் பார்ப்பது வேதனையளிக்கிறது.
பொது இடங்களிலோ, மன்றங்களிலோ பணம் வைத்து சூதாடினால் அது குற்றம் ஆகும். ஆனால், ஆன்லைன் சூதாட்டங்கள் இன்னும் குற்றமாக்கப்படவில்லை. சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட பல நீதிமன்றங்களே வலியுறுத்தியும் ஆன்லைன் சூதாட்டம் இன்னும் குற்றமாக்கப்படவில்லை; தடை செய்யப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது. ஏற்கனவே பலமுறை வலியுறுத்தியிருக்கும் போதிலும், மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறேன். மத்திய, மாநில அரசுகளே… ஆன்லைன் சூதாட்டம் என்ற ஆக்டபஸ் இன்னும் பல குடும்பங்களை வளைத்து சீரழிப்பதற்கு முன்பாக அதை தடை செய்யுங்கள்; அதன்மூலம் கோடிக்கணக்கான குடும்பங்களைக் காப்பாற்றுங்கள் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.இவ்வாறு தனது அறிக்கையில்  தெரிவித்துள்ளார்.

https://www.facebook.com/DrRamadoss/posts/1658328514331428