கர்நாடகாவில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களுருவில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பெங்களுருவில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டிய 5 பேர் தீவிரவாதிகளா? என பெங்களூரு குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சையத் சுஹெல், உமர், ஜானித், முதாசிர், ஜாஹித் ஆகியோரை பெங்களூரு குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களுரு நகரில் வெடிகுண்டு தாக்குதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட சதி திட்டம் தீட்டியது விசாரணையில் அம்பலமானது.
கைதான 5 பேரும் 2017ல் நடந்த கொலை வழக்கில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர் எனவும் கூறப்படுகிறது. சிறையில் இருந்தபோது தீவிரவாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. பெங்களுருவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற நிலையில், தற்போது பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 5 பேர் கைது செய்யப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.