கர்நாடகாவின் இந்தத் தேர்தல் எம்.எல்.ஏ., அமைச்சர், அல்லது முதல்வரை தேர்வு செய்வதற்கு மட்டுமல்ல, வரும் 25 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான பாதையை வலுப்படுத்தவே என தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் வரும் மே 10 ஆம் தேதி மற்றும் வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் தேதியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில் ஆளும்கட்சியான பாஜகவும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பலத்த போட்டியிடுகின்றன.
இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி, இன்று கர்நாடகாவின் ராமநகர மாவட்டத்தில் உள்ள சன்னபட்டானாவில் தேர்தல் பரப்புரையில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நான் ஊழலுக்கு எதிராக போராடுவதால் காங்கிரஸ் என்னை வெறுக்கிறது, என்னை அவதூறாக பேசுகின்றனர். கர்நாடக மக்கள் இதற்கு தேர்தலில் வாக்குப்பதிவில் பதிலடி கொடுப்பார்கள்
விவசாயிகளுக்கும், நாட்டுக்கும் காங்கிரஸ் துரோகம் இழைத்துள்ளனர். கர்நாடகாவில் ஜேடிஎஸ்(ஜனதா தளம்) தன்னை ‘கிங்மேக்கர்’ என்று அழைக்கிறது, மேலும் ஜேடிஎஸ்-க்கு ஒவ்வொரு வாக்கும் காங்கிரசுக்கு வாக்குகளை சேர்க்கிறது. காங்கிரஸ் ஏழைகளை புறக்கணித்தது. ஆனால் பாஜக விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்காக பாடுபடுகிறது என்று கூறினார்.
காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் ஊழலை மட்டுமே ஊக்குவிக்கின்றன, மேலும் கர்நாடகாவின் இந்தத் தேர்தல், அடுத்த 5 ஆண்டுகளுக்கான எம்.எல்.ஏ., அமைச்சர், அல்லது முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கு மட்டுமல்ல, அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான பாதையை வலுப்படுத்தவே இந்தத் தேர்தல் என நரேந்திர மோடி கூறியுள்ளார்.