சட்ட விரோதமாக குழந்தையை விற்ற காப்பக உரிமையாளருக்கு நிபந்தனை ஜாமீன்….!

சட்ட விரோதமாக குழந்தையை விற்ற மதுரை இதயம் காப்பக உரிமையாளருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் இயங்கி வரக்கூடிய இதயம் எனும் தனியார் ஆதரவற்றோர் காப்பகத்தில் ஐஸ்வர்யா என்பவருடைய ஒரு வயது ஆண் குழந்தை வளர்க்கப்பட்டு வந்த நிலையில், இந்த குழந்தை கொரோனாவால் உயிரிழந்ததாக குழந்தையின் உறவினர்களிடம் காப்பக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக குழந்தையின் குடும்பத்தினர் காவல் துறையில் புகார் அளித்த நிலையில், வருவாய் துறையினர் அந்த காப்பகத்தில் விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்பொழுது அந்த காப்பகத்தில் இருந்த மேலும் ஒரு பெண் குழந்தை காணாமல் போயிருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் குழந்தைகள் இங்கிருந்து வேறு ஒருவருக்கு விற்கப்பட்ட சம்பவம்  தெரியவந்துள்ளது. இதனையடுத்து சட்ட விரோதமாக குழந்தையை விற்ற காப்பக உரிமையாளர் கலைவாணி, 2 இடைத்தரகர்கள், தம்பதிகள் இருவர், என மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தற்போது சட்ட விரோதமாக குழந்தையை விற்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருந்த மதுரை இதயம் காப்பக உரிமையாளர் கலைவாணிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கலைவாணி தல்லாகுளம் காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதித்து உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

author avatar
Rebekal