கூட்டணி அறத்தை காத்திட வேண்டும் – முதலமைச்சருக்கு திருமாவளவன் கோரிக்கை!

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. 20 மாநகராட்சிகளில் திமுக வேட்பாளர்களும், கும்பகோணம் மாநகராட்சியில் காங்கிரஸ் வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர்.

இதைத்தவிர பெரும்பாலான உள்ளாட்சி பதவிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை ஒன்றை வைத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவை மீறி கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக சார்பில் போட்டி வேட்பாளர்களாக நின்று வெற்றிப் பெற்றவர்களை ‘ராஜினாமா’ செய்ய வைத்து ‘கூட்டணி அறத்தைக்’ காத்திட வேண்டுமென முதல்வர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

திமுக கூட்டணியில் விசிகவுக்கு கடலூர் மாநகராட்சி துணை மேயர் பதவி, ஜெயகொண்டம் மற்றும் நெல்லிக்குப்பம் நகராட்சிகள் தலைவர் பதவிகள் ஒதுக்கப்பட்டன. மேலும், 3 நகராட்சி துணை தலைவர்கள், 3 பேரூராட்சி தலைவர்கள் மற்றும் 7 பேரூராட்சி துணை தலைவா பதவிகள் ஒதுக்கப்பட்டன என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்