தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்க்க முதல்வர் உத்தரவு.!

பொங்கல் பரிசு பொருட்கள் விநியோகத்தில் புகார்கள் எழ காரணமாக இருந்த அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் உத்தரவு.

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய சிறப்பு பரிசுத் தொகுப்பு ரூ.1,297 கோடி மதிப்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. இருப்பினும், இந்த பொங்கல் தொகுப்பு தரமற்றதாக வழங்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் சில வீடியோக்கள் வெளியிடப்பட்டு வந்தது. பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்ததில் பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில், இன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் உணவுப்பொருள்கள் வழங்கல் துறை ஆணையர் ராஜாராம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த நிலையில், ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், பொங்கல் பரிசு பொருட்கள் விநியோகத்தில் புகார்கள் எழ காரணமாக இருந்த அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட தேவையான உரிய நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

மக்களுக்கு அனைத்து வகையிலும் தரமான பொருட்கள் மட்டுமே வழங்கப்பட வேண்டும். அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க இயலாது. தவறு செய்வோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசு அலுவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், நியாயவிலை கடைகளில் பொது மக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் எப்போதும் தரமானதாகவும், உரிய எடையிலும் விநியோகம் செய்யப்படுவதை அந்தந்த பகுதிகளிலுள்ள அரசு அலுவலர்கள் உறுதி செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்