#IPL2021: “16 கோடிக்கு கிறிஸ் மோரிஸ் வொர்த் இல்லை”- பீட்டர்சன் ஓபன் டாக்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் விளையாடும் தென் ஆப்பிரிக்கா அணியின் ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ், “16 கோடிக்கு தகுதியானவர் இல்லை” என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடர், கொரோனா பரவலுக்கும் மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அதிகபட்ச தொகையான ரூ.16 கோடிக்கு ஏலம்போனவர், தென்னாபிரிக்கா அணியின் ஆல்-ரவுண்டர் கிறிஸ்மோரிஸ். இவரின் அடிப்படை விலை ரூ.75 லட்சமாக இருந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை ரூ.16.25 கோடிக்கு ஏலம் எடுத்தது.

இதுவரை ஐபிஎல் தொடரின் எந்தவொரு வெளிநாட்டு வீரரும் இவ்வளவு அதிகமான தொகைக்கு ஏலம் போனது கிடையாது. அவர் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இதுவரை 4 போட்டிகளில் விளையாடி, ஒரே ஒரு வெற்றியை மட்டும் பதிவு செய்தது. டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ஆணை வெற்றிபெற்றது. அந்த வெற்றிக்கு கிறிஸ் மோரிஸ், முக்கிய பங்கு வகித்தார்.

34 வயதான கிறிஸ் மோரிஸ், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் 4 போட்டிகள் விளையாடிய அவர், 48 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். பந்துவீச்சில் 5 விக்கெட்களை கைப்பற்றினார். இந்நிலையில், ரூ.16 கோடிக்கு கிறிஸ் மோரிஸ் வொர்த் இல்லையென இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார். மேலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஏலத்தில் கிறிஸ் மோரிசுக்கு வழங்கிய தொகை ரூ.16 கோடி அதிகம் என்று நினைப்பதாகவும், தனக்கு அதிகமான விலை கொடுத்ததன் அழுத்ததை மோரிஸ் உணர்ந்து வருவதாகவும், 2 போட்டிகளில் ரன்கள் அடிப்பார் என்றும், சில போட்டிகளில் காணாமல் போய் விடுவார் என்று தெரிவித்துள்ளார்.