எண்ணெய் கப்பல் சீன கடல் பகுதியில் வெடித்து சிதறும் ஆபத்து!

ஈரானிலிருந்து தென்கொரியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்ட டேங்கர் கப்பல் ஒன்று, சனிக்கிழமை கிழக்கு சீனா கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ஹாங்காங்கைச் சேர்ந்த மற்றாரு கப்பலுடன் எதிர்பாராத விதமாக மோதியது. அந்த கப்பலில் 1,36,000 டன்கள் அளவிற்கு எண்ணெயும், ஹாங்காங் கப்பலில், தானியங்களும் இருந்தன.
இந்த விபத்தில் பலத்த சேதமடைந்த எண்ணெய் கப்பல் தீ பிடித்து எரியத் தொடங்கியது. அந்த கப்பலில் இருந்த வந்த 30 ஈரானியர்கள் மற்றும் 2 வங்கதேசத்தவர்களின் நிலை பற்றி விவரங்கள் வெளியாகவில்லை. ஹாங்காங் கப்பலில் இருந்த சீனர்கள் மீட்கப்பட்டனர். மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
எண்ணெய் கப்பலிலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும் தீ மூட்டம் காரணமாக அந்த கடல் பகுதி முழுவதும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மிகப் பெரிய தீ வளையம் சூழ்ந்தது போல் காட்சியளிக்கிறது. கருப்புப் புகை மண்டலமாக அந்தப் பகுதி இருப்பதை சீன தொலைக்காட்சி சேனல்கள் வெளியிட்டன.
கடல்பரப்பில் பெருமளவில் எண்ணெய் பரவிக் கொண்டிருக்கிறது. இதனிடையே எண்ணெய் கப்பல் எந்நேரத்திலும் வெடித்து சிதறும் ஆபத்து உள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு வெடித்து சிதறினால் மிகப் பெரிய அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பும், சேதமும் ஏற்படும் என கூறப்படுகிறது.
source: dinasuvadu.com

Leave a Comment