“கட்சிக்கும்,ஆட்சிக்கும் உறுதுணை” – புகழ்ந்த முதல்வர் ஸ்டாலின்;கண்கலங்கிய அமைச்சர் துரைமுருகன்….!

திமுக கட்சிக்கும்,ஆட்சிக்கும் உறுதுணையாக இருக்கிறார் என்று அமைச்சர் துரைமுருகனை, முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார்.

தமிழக சட்டப் பேரவையில் பொன்விழா காணும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,இன்று சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

மேலும்,இது தொடர்பாக முதல்வர் பேசியதாவது:

மகிழ்ச்சிக்குரியது,பெருமைக்குரியது:

“சட்டப் பேரவையில் நீர்வளத்துறையின் மானியக் கோரிக்கையை அத்ததுறையின் அமைச்சர் தாக்கல் செய்யவுள்ளார்.நீர்வளத்துறையின் அமைச்சராக பொறுப்பு ஏற்றுள்ளவரும், திமுகவின் பொதுச்செயலாளராகவும்,இந்த அவையின் முன்னவராகவும்,எனது மதிப்பிற்கும் ,மரியாதைக்கும் உரிய அண்ணன் துரைமுருகன் அவர்களது துறையினுடைய மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

இந்த அவையிலேயே,இந்த துறையின் சார்பில் மானியக்கோரிக்கை தாக்கல் செய்வது மகிழ்ச்சிக்குரியது,பெருமைக்குரியது,அதற்காக எனது வாழ்த்துக்கள்.

அவையின் முன்னவர்:

100 ஆண்டு வரலாறு கொண்டுள்ள இந்த சட்டப்பேரவைக்கு அரை நூற்றாண்டுக்கும் முன்வந்தவர்தான் அமைச்சர் துரைமுருகன் அவர்கள்.இவர் 50 ஆண்டுகளாக இந்த அவை நடவடிக்கைகளில் பங்கு கொண்டுள்ளார்.இந்த மன்றத்தை அலங்கரித்து கொண்டிப்பவர்களில் முக்கிய உறுப்பினராக,மூத்த உறுப்பினராக உள்ளவர்தான் அமைச்சர் துரைமுருகன் அவர்கள்.

அதனால்தான்,அவர் இந்த முன்னவராக இருந்து வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்.தனிப்பட்ட முறையில் சொல்லவேண்டும் என்றால் தலைவர் கலைஞர் மற்றும்  பேராசியர் மறைவுக்கு பிறகு எனக்கு வழிகாட்டியாக இருந்து கொண்டிருப்பவர் அண்ணன் துரைமுருகன்.அவர் அடிக்கடி பொதுக்கூட்டத்தில் எல்லாம் என்னை பற்றி சுட்டிக்கட்டுவார்.இளம் வயது பையனாக நான் ஸ்டாலினனை பார்த்து இருக்கிறேன் என்று பல மேடைகளில் சொல்லியிருக்கிறார்.

கலைஞர் இடத்தில்:

நானும் அவரை கலைஞர் இடத்தில் பேராசிரியர் இடத்தில் வைத்து பார்க்கிறேன்.அதனை இங்கு பதிவு செய்கிறேன்.எதுவாக இருந்தாலும் மனதில் ஏதும் வைத்துக்கொள்ள மாட்டார்.மனதில் பட்டதை அப்படியே எடுத்து சொல்லி கட்சிக்கும் ஆட்சிக்கும் துணையாக இருப்பவர்.அவரது ஊர் பெயர் கேவி குப்பம் ஒரு காலத்தில் “கீழ் வழிதுணையான் குப்பம்” என்று அழைக்கப்பட்ட ஊர் ஆகும்.அவ்வாறு எனக்கு வழித்துணையாக உள்ளவர்தான் அண்ணன் துரைமுருகன் அவர்கள்.அதைப்போன்றே கலைஞர் அவர்களுக்கும் வழித்துணையாக இருந்துள்ளார்.

எங்களுக்கு பொறாமை:

கலைஞர் அவர்கள் அமைச்சர் துரைமுருகனை பாசமாக துறை என்றே அழைப்பார்.அவருடன் இனிமையாக பேசுவார்,பழகுவார்,இரண்டு பேரும் பேச ஆரம்பித்தால் மணிக்கணக்கில் நேரம் போவது கூட தெரியாமல் பேசுவார்கள்.அதை பார்க்கும்போது எங்களுக்கு பொறாமை கூட ஏற்படும்.

என்றைக்காவது அமைச்சர் துரைமுருகன் அவர்கள் தலைவர் வீட்டுக்கு வரவில்லை என்றால்,அல்லது காலதாமதமானால்,உடனே அவரை போனில் அழைத்து எங்கு உள்ளார் என்று கேள்? என்று கலைஞர் கூறுவார்.

கலைஞரின் உள்ளம் துடித்தது:

குறிப்பாக,2007 ஆம் ஆண்டு கலைஞர் அவர்களது உடல்நிலை பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டு,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அப்போது தலைவர் கலைஞரின் உள்ளம் எப்படி துடித்தது என்று நான் அருகில் இருந்து பார்த்தேன்.

மறுநாள் காலையில் அமைச்சர் துரைமுருகன் அவர்களுக்கு ஒரு அறுவை சிகிச்சை நடக்க இருந்தது.அதற்கு முதல்நாள் இரவில் துரைமுருகன் அவர்களை போனில் அழைத்து என்ன துரை? தூங்கிட்டியா? என்று கலைஞர் கேட்டார்.”இல்லை அண்ணா..இன்னும் தூங்கவில்லை” என்று அவர் சொன்னார்.அப்போது,கலைஞர் அவர்கள்,”நாளை ஆப்ரேசன் நினைத்து பயந்து கொண்டிருக்கிறாயா? என்று கேட்டார்.இல்லை அண்ணா என்று அமைச்சர் துரைமுருகன் சமாளிக்க,”உன்னை பத்தி எனக்கு தெரியும்”என்று கூறி,மருத்துவமனைக்கு சென்று இரவு முழுவதும் அவருடன் கலைஞர் அவர்கள் இருந்தார்.இந்த பாசத்தைதான்  நான் பெருமையுடன் சொல்கிறேன்.

ஒருதாய் வயிறு தாங்காது:

பேரறிஞர் அண்ணா கூறுவதைபோன்று “ஒருதாய் வயிறு தாங்காது என்ற காரணத்தால் தனித்தனி தாய் வயிற்றில் பிறந்தவர்கள் நாம் “,என்று கூறியதை,இந்த பாசமும்,இந்த நிகழ்வும் நமக்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.அந்த அளவுக்கு கலைஞர் அவர்களது அன்பைப் பெற்றவர் அண்ணன் துரைமுருகன் அவர்கள்.இவர் கலைஞரின் அருகில் அல்ல,அவரது இதயத்திலே ஆசனம் போட்டு அமர்ந்து இருந்தவர்.அத்தகைய இடம் எல்லாருக்கும் கிடைக்காது.

முத்திரை:

அவர் எந்த துறைகளை கொடுத்தாலும் முத்திரை பதிப்பார்.இப்போது சொல்ல சொன்னால் கூட அனைத்து ஆறுகளின் பெயரை விரைவாக கூறுவார்.

குறிப்பாக,இந்த கூட்டத்தை அழ வைக்க நினைத்தால் அழ வைப்பார்.அதே நேரத்தில் சிரிக்க வைக்கவும் செய்வார்.அமைதியாக இருங்க அண்ணா என்று கூறினால் அதையும் கேட்பார்.அந்த அளவுக்கு ஆற்றல் பெற்ற ஒருவர்.திமுக அரசில் பொறுப்பு ஏற்றிருப்பது,திமுக அரசுக்கு,இந்த அவைக்கு கிடைத்த பெருமை.

சட்டமன்றத்தில் 50 ஆண்டுகள் பங்கெடுத்து பொன்விழா நாயகராக திகழ்கிறார் துரைமுருகன்,பொன்னைப் போல பளபளவென்று சட்டை அணிந்து,புன்னகை எப்போதும் அவரது முகத்தில் இருக்கும்.அத்தகையவருக்கு பாராட்டு தெரிவிக்கும்  விதமாக இந்த தீர்மானத்தை முன்மொழிகிறேன்.அனைவரும் இதனை நிறைவேற்றி தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

முதல் அமைச்சர் பேசும் போது அமைச்சர் துரைமுருகன் அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கினார்.  பின்னர் பேசிய அமைச்சர் துரைமுருகன், “ முதல்வர்  மு.க ஸ்டாலினுக்கு நன்றிக் கடன் பட்டவனாக வாழ்நாள் முழுவதும் இருப்பேன். இவ்வளவு பற்றும் பாசமும் முதல் அமைச்சர் என் மீது வைத்திருப்பார் என நினைக்கவில்லை” என்று கூறினார்.