29 C
Chennai
Saturday, October 23, 2021

“மூத்த பத்திரிக்கையாளர் வி.அன்பழகன் மறைவு” – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!

மூத்த பத்திரிக்கையாளர் வி.அன்பழகன் அவர்களின் மறைவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொருளாளரும்,மூத்த பத்தரிகையாளரும்,மக்கள் செய்தி மையத்தின் நிறுவனர் மற்றும் ஆசிரியருமான வி.அன்பழகன், கொரோனா தொற்று காரணமாக வடபழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்

இந்த நிலையில்,சிகிச்சை பலனின்றி கொரோனாவால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மக்கள் செய்தி மையத்தின் நிறுவனர் வி.அன்பழகன் இன்று பிற்பகல் உயிரிழந்துள்ளார்.அவரது மறைவிற்கு பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில்,மூத்த பத்திரிக்கையாளர் வி.அன்பழகனின் மறைவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் முதல்வர் கூறியிருப்பதாவது:

“சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொருளாளரும் மூத்த பத்திரிகையாளருமான திரு.வி.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக மறைவுற்றார் என்ற அதிர்ச்சி தரும் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நக்கீரன், தமிழ் முரசு உள்ளிட்ட ஊடகங்களில் பணியாற்றிய அன்பழகன் அவர்கள் மாற்றுக்குரல்களின் முக்கிய முகமாகத் திகழ்ந்தார் என்பதை அனைவரும் அறிவர். மக்கள் செய்தி மையம் என்ற ஊடகத்தைத் தொடங்கிய அவர் அதிகார மையங்களின் தவறுகளை வெளிக்கொண்டுவந்து மக்கள் முன் நிறுத்துவதில் முனைப்புடன் செயலாற்றியவர்; அடக்குமுறைகளை அஞ்சாமல் எதிர்கொண்டவர்.

உண்மையின் பக்கம் நின்று செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்க துணிவுடன் செயல்பட்ட அவரது பணி ஊடக உலகில் நிலைத்து நின்று அவரது புகழைப் பேசும். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஊடகத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

 

 

spot_imgspot_img

Hot Topics

Read More